சிரம்பான் சந்தையில் வேலை செய்துவந்ததாக நம்பப்படும் ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேர் கைது

சிரம்பான் :

நெகிரி செம்பிலான் பிரதான சந்தையில் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 14 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது.

“பல வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இப்பகுதியில் வேலை செய்வதாக” பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கென்னித் டான் ஐ கியாங் தெரிவித்தார்.

எனவே திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 8 இந்தோனேசியர்கள், 5 மியான்மர் பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் ஆகியோர் அதிக காலம் ஆவணங்களின்றி தங்கியிருப்பது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது அல்லது அவர்களின் விசா நிபந்தனைகளை மீறியது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டன என்றார் அவர்.

கைது செய்யப்படட 14 வெளிநாட்டவர்களில் இருவர் பெண்கள் என்றும், சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு லெங்கெங்கில் உள்ள குடிநுழைவு டிப்போவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் சந்தை வளாகத்தில் அவர்களை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர்கள் என்று நம்பப்படும் ஒன்பது மலேசியர்களும் விசாரணையில் உதவுவதற்காக திணைக்களத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக டான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here