சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் 15,000ஐ கடந்தன; புதிய சம்பவங்கள் 690

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 29) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 690 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,641 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் 8 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 528 பேரில் 511 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

விடுதிகளில் வசிக்கும் மொத்தமுள்ள 323,000 வெளிநாட்டு ஊழியர்களில், நேற்றைய நிலவரப்படி, சுமார் 3.9 விழுக்காடு அதாவது 12,694 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டதையடுத்து, நேற்று விடுதிகளில் இருப்போரிடையே அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

அவர்களில் பலருக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் சமூகத்தில் உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளில் அல்லது மருத்துவமனைகளின் பொது வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் சமூகத்தில் கிருமிப் பரவல் எண்ணிக்கை  கடந்த வாரத்தில் சராசரி தினசரி எண்ணிக்கை 17ஆகக் குறைந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு அந்த சராசரி தினசரி எண்ணிக்கை 28ஆக இருந்தது.

அதேபோல சமூகத்தில் தொடர்புகள் கண்டறியப்படாமல் ஏற்படும் கிருமித்தொற்றின், கடந்த வார சராசரி தினசரி எண்ணிக்கையும் 10ஆகக் குறைந்துள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு அந்த சராசரி தினசரி எண்ணிக்கை 18ஆக இருந்தது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1,128 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கிருமித்தொற்றால் ஏற்பட்ட உடல்நல நெருக்கடிகளால் இதுவரை மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருமித்தொற்று கண்ட, ஆனால், வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.உலகம் முழுவதிலும் கொரோனா கிருமியால் 3.13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 217,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள், சுமார் 58,000 மரணங்களுடன் அமெரிக்கா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here