காட்டுக்குள் நுழைந்து ஒரு குச்சியை வெட்டினால் அது குற்றம் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயமோ , வீடு கட்டிக்கொண்டாலோ அது குற்றம். இப்படித்தான் நாட்டு நடப்பு இதுவரை இருந்து வருகிறது.
பத்தாங்காலி, கம்போங் உலு ரெனிங் காட்டுப்பகுதியின் அருகே காட்டின் நடுவே ஒரு கிராமமே உருவாகியிருக்கிறது. 238 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். உள்ளபடியே யார் இவர்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? ஏன் வந்தார்கள்? இதற்குமுன் என்கிருந்தார்கள் ? என்பதற்கெல்லாம் சரியான பதிலை போலீசார் மட்டுமே தரமுடியும்.
இவர்களில் 154 பேர் கோலகுபுபாரு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 76 ஆண்களும் 77 பெண்களும் 85 குழந்தைகளும் இருக்கின்றனர்.
காட்டுக்குள் புகுந்து ஓர் அத்திப்பெட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கு சில மாதங்கள் ஆகியிருக்கும்.
போலீசார், வனத்துறை , மாவட்ட ஆட்சியாளர்கள் என ஏகப்பட்ட அரசு அதிகாரிகள் இருந்தும், எவர் கண்ணிலும் படாமல் இருந்திருக்கிறார்கள் என்றால் மாய மந்திரம் படித்தவர்களாக இருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.
இவர்கள் தங்களை டேவான் பெர்காசா நுசாந்தாரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிரகடனப் படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது. இவர்கள் எந்த இயக்கம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த இயக்கம் பதிவுசெய்யப்பட்டதா? என்பதிலும் ஆயிரம் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி கட்டுப்பாடு ஆணை மீறப்பட்டதாக இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வனப்பகுதியும் அழிக்கப்பட்டு மரங்கள் சாய்க்கப்பட்டிருக்கின்றன. நில அழிப்பு செய்யப்பட்டிருக்கின்றன, நில உரிமை பெறாமல் சட்ட விரோத குடியேற்ற ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. ஆனாலும் இவர்கள் மலேசியர்கள். ரோஹிங்கியரகள் அல்லர். இதில் இன்னொன்றும் கவனிக்கத்தக்கது.
இவர்களின் இயக்கம் தவறான போதனையில் வழிநடத்துகிறதா என்பதும் தெரிய வேண்டும் உண்ணுதல், குளித்தல், உறங்குதல் எல்லாம் அங்குதான் நடக்கின்றன.
இவர்களைக்கைது செய்ததில் கோலாலம்பூர், கிளந்தான் பகுதியிலிருந்து குடியேறிவர்கள் என்று அறியப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சினைக்குரிய கேள்வி.
இவர்கள் நாடற்றவர்கள் அல்லர். காட்டில் குடியேற வேண்டிய எந்த அவசியமும் இவர்களுக்கு இல்லை. ஆனாலும் வனப்பகுதிக்குள் வாழ்க்கைக்குடில் அமைத்து வாழ முயற்சித்திருக்கிறார்கள். ஏன்? காரணமின்றி குடுமிகள் ஆடாதே! இதன் பின்னணி என்ன?