விற்கவும் முடியவில்லை – வாங்கவும் ஆளில்லை எலி, கரப்பான் பூச்சிகளால் தொடரும் தொல்லை

கொரோனா பாதிப்பால் கடைகள் திறக்க முடியாததால் ஜவுளிகளை விற்கவும் முடியவில்லை. வாங்கவும் ஆளில்லை. ஆனால் எலி மற்றும் கரப்பான் பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது ஜவுளிகடைகள் என்று நாட்டிலுள்ள பல ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

மற்ற வியாபாரிகளுக்கு கடை வாடகை மற்றும் பணியாளர்கள் ஊதியம் ஆகியவை மட்டும்தான். ஆனால் எங்களை போன்ற ஜவுளி கடைக்காரர்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான வெள்ளி துணிமணிகள் கடை திறக்காத காரணத்தால் மிகவும் சேதமடைந்து வருகிறது. எங்களின் பொருள் வழங்கியவர்கள் ஒருபுறம் அதற்கான பணத்தை கேட்கின்றனர். அதே வேளை நாங்கள் அனைவரும் சொந்த கடைகளில் வியாபாரம் செய்பவர்களும் அல்லர்.

எங்கள் நிறுவன பணியாளர்களுக்கு உணவு, தங்குமிட வசதியை காலங்காலமாக முதலாளிகளாகிய நாங்கள் வழங்கி வருகிறோம். எம்சிஓ காலகட்டம் என்பதால் அவர்களை பட்டினி போட முடியாது என்று கிள்ளான் துங்கு கிள்ளான் பகுதி வணிகர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து இறக்குமதி செய்திருக்கும் ஜவுளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது. எம்சிஓ மேலும் நீட்டிக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறோம் என்று மலேசிய இந்தியர் ஜவுளித்துறையில் தலைவரும் காயத்ரி பட்டுமாளிகை உரிமையாளருமான டத்தோ ஆர்.ரகுமூர்த்தி தெரிவித்தார்.

கடனை செலுத்த வேண்டுமே என்ற கவலை ஒருபுறம். கோடிக்கணக்கான வெள்ளி முதலீடு செய்து வைத்திருக்கும் துணிமணிகளை எப்போது விற்பது என்ற  கவலை மறுபுறம்  என  பல கவலையுடனே இருக்கிறோம்.

எங்களின் வேதனைகளை யாரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கிறோம். பிரதமர் டான்ஶ்ரீ மொஹிடின் யாசின் 2600 கோடி வெள்ளி நிவாரண நிதியை அறிமுகம் செய்துள்ளது வரவேற்கதக்கது. ஆனால் எங்களை போன்ற வர்த்தகர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.

குறிப்பாக வங்கிக்கடனை பெறுவதை இலவகுவாக்க வேண்டும். நாங்கள் எதிர்நோக்கும்  பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க அரசாங்கம் வழி வகுக்க வேண்டும். இதர வர்த்தகர்களுக்கு பொருளாதார பிரச்சினைதான்…. ஆனால் எங்களுக்கு நாங்கள் முதலீடே நஷ்டப்படுகிறதே என்று வர்த்தகர்கள் தங்கள் மனக்குமுறலை மக்கள் ஓசையிடம் வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here