கோலாலம்பூர் –
சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகையிலும் வைரலாகி வந்த சுவீட் கேர் ஹோம் என்ற சிறார் காப்பகம் நேற்று சீல் வைக்கப்பட்டது.
அங்கு தங்கியிருந்த சிறார்கள் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல கொடுமைகளுக்கு ஆளாகி வந்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து தீவிர புலன் விசாரணையில் இறங்கிய கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகம் காப்பகத்திற்கு சீல் வைத்தது.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடம் தற்போது போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
பல சிறுவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தக் காப்பகம் எவ்வித ஆவணங்கள் இன்றி இங்கு செலாயாங், தாமான் செலாயாங் ஜெயாவில் செயல்பட்டு வந்திருப்பது அண்மைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் காப்பகத்தில் 35க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தனர். இங்கு பாலியல் தொந்தரவு உட்பட பலவிதமான துன்புறுத்தல்கள் நிகழ்வதாக வெளியான ஒரு காணொளி பெரும் வைரலான பிறகு போலீஸ் அதிரடியாக இங்கு களமிறங்கியது.