எல்லைப்புற எலிகள் கள்ளத் தனமாக நுழையும் பாதைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருக்கிறது, இதற்கான வேலைகளை கடத்தல் தடுப்பு குழு செய்திருக்கிறது என்று முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார். இச்செய்தி மகிழ்ச்சியானது, ஆனாலும் சிந்திக்க வைக்கிறது.
இப்போதெல்லாம் கடத்தல், ஊழல் என்ற சொல் ஓய்ந்துகிடக்கிறது என்று உரக்கச் சொல்லலாம். இந்த வார்த்தைகள் அதிகமாகப் பேசப்படுவதில்லை என்றால் என்னவாக இருக்கும். கடத்தலும் ஊழலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதாகத்தான் இருக்கும்.
முன்பெல்லாம் ஊழல் ஒழிப்புக்கும் கடத்தலுக்கும் வழி வகுத்தவர்கள் இப்போது என்ன ஆனார்கள், அல்லது ஆகியிருப்பார்கள்? நிச்சயமாக கொரோனாவில் சிக்கியிருக்கும் வாய்ப்பிலை. அப்படியே சிக்கியிருந்தாலும் அவர்களால் வெளிப்படையாகத் தலைகாட்ட முடியாது. அதனால், பதுங்கியிருக்கிறார்கள். பதுங்கிக் கிடப்பதால் அவர்களின் நடமாட்டம் இல்லாமலிருக்கிறது. அவ்வளவுதான்.
ஆனால், அவர்களின் நடமாட்டம் இல்லையென்ற முடிவுக்கும் வந்துவிடவும் முடியாது. ஒரு பழமொழி இருக்கிறது. புலி பதுங்குகிறது என்றால் பாய்வதற்காக என்பார்கள். அதுபோலத்தன் கடத்தல் பெர்வழிகள் சந்தர்ப்பம் வருமென்று அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அடங்கியிருப்பதும் தற்காலிகமே. காலம் கனியும்போது இது விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஒரு செய்தியை கடத்தல் பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர். கள்ளத்தனமாக நுழைகின்றவர்கள் தங்கள் குடும்பம் மலேசியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் அது. இப்படிக் கூறும்போதே உண்மை உறக்கத்தில் இருப்பது தெரியும்.
இவர்கள் கள்ளத்தனமாக வருவதும் போவதும் வாடிக்கையானது என்று நன்கு புலப்படுகிறது என்பதும் இங்கே குடும்பத்தோடு இருப்பதும் தெளிவான உண்மை. இதுதான் உண்மை என்றால் இதற்குமுன் நாட்டிற்குள் நுழைவதற்கான எலி வலையில் ஓட்டை கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது என்பது மிகத் தெளிவு.
எலி வலை ஓட்டை, இன்று அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது. இதே போன்ற நடவடிக்கைகள் முன்பும் கையாளப்பட்டன. அப்போது மட்டும் ஓட்டைகள் அடைக்கப்படவில்லையே ஏன்?
ஊழலும் இருந்திருக்கிறது, இதற்கு அரசு அதிகாரிகளே காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்ற ஐயம் எழுத்தானே செய்கிறது. எல்லைக்காவலில் உள்ள ஓட்டைகள் நிரந்தரமாக அடைக்கப்பட அதிகாரிகள் எமனாகச் செயல்பட வேண்டும். எம்டனாக இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அதிகாரிகளின் ஊழல் ஓட்டை அடைபட வேண்டும்.