அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கியே ஆலயங்களின் பட்டியலை வெளியிட்டோம் – டத்தோ மோகன்ஷான் விளக்கம்

நாட்டிலுள்ள ஆலயங்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததாலும் அரசாங்கம் மலேசிய இந்து சங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியும் ஆலயங்களின் பட்டியலை வெளியிட்டோம். அதில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள ஆலயங்களை திறக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கவில்லை என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தெளிவுப்படுத்தினார்.

ஆலயங்களை மீண்டும் திறக்க விரும்புவோர் எங்கள் இணையத்தளம் வழி விவரங்களை அனுப்பலாம் என்று கேட்டிருந்தோம். அதில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட ஆலய நிர்வாஸ்கதர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.  சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர்  ஆகிய மாநிலங்களிலுள்ள ஆலயங்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்திருந்தன.

அதில் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மண்டலங்களிலுள்ள ஆலயங்களை தவிர்த்து 105 ஆலயங்களை மீண்டும் திறக்க ஒற்றுமை அமைச்சிடம் கடிதம் வழங்கியிருந்தோம். அதில் 84 ஆலயங்களுக்கு மட்டுமே ஒற்றுமைதுறை அமைச்சர் டத்தோ ஹலிம் பிந்தி முகமட் சாடிக் அனுமதி வழங்கியிருந்தார்.

மீண்டும் அனுமதி கிடைக்காத ஆலயங்களுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறோம்.  இந்து சங்கத்தின் சுய லாபத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ நாங்கள் இந்த பட்டியலை வழங்கவில்லை. மேலும் நாங்கள் நாடளாவிய நிலையில் அனைத்து ஆலயங்களுக்கும் அனுமதி பெற்றுதர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால் மாநில அரசு அல்லது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அந்தந்த மாநிலங்களிலுள்ள ஆலயங்களை திறக்கலாமா என்பதனை முடிவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதே வேளை கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா  எம்சிஓ முடியும் வரை அவர்களுக்கு கீழ் இயங்கும் ஆலயங்கள் திறக்கப்படமாட்டாது என்பதனையும் அந்த கூட்டத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் என்றும் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் கூறினார்.

மேலும் அரசாங்கம் திட்டவட்டமாக சிறிய ஆலயங்கள், பாலஸ்தாபனம் செய்த ஆலயங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி கிடையாது என்று இந்து சங்கத்திடம் மிகவும் கண்டிப்பான முறையில் கூறியிருக்கின்றனர் என்பதனையும் அவர் நினைவுறுத்தினார்.

அந்த வகையில் பேராக்  மாநிலத்தில் 38 ஆலயங்கள், கிளந்தானில் 4 ஆலயங்கள், தெராங்கனுவில் 4 ஆலயங்கள், பகாங் மாநிலத்தில் 1 ஆலயம், சபாவில் 3 ஆலயங்கள், கெடா மாநிலத்தில் 15 ஆலயங்கள், பினாங்கில் 19 ஆலயங்கள் என 84 ஆலயங்கள் மட்டுமே ஜூன் 10ஆம் தேதி திறக்க வழங்கப்பட்டிருக்கிறது.

மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள்  சிவப்பு மண்டலம் என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.  அதே வேளை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இருக்கும் சில பச்சை மண்டலங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு  மீண்டும் விண்ணப்பம் செய்திருக்கிறோம் என்றார். ஆலய விவரங்களை அனுப்ப வேண்டிய இணையத்தள முகவரி: MHS website: www.malaysiahindusangam.org – MHS FB:  www.facebook.com/MalaysiaHinduSangam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here