ஜோகூரில் தொடங்கியது ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தின் பெர்சடா இன்டர்நேஷனல் கான்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025–ஐ அம்மாநில மந்திரி பெசார் டத்தோ’ ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவராற்றிய தொடக்க உரையில் அவர் கூறியதாவது:
இம்மாநாடு ஜோகூரை ஆசியான் பிராந்தியத்துக்கான டிஜிட்டல் உள்ளடக்கத்தின் முக்கிய வாயிலாக நிலைநிறுத்துவதோடு, புதிய முதலீடுகள், உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும். மேலும், ஜோகூர்–சிங்கப்பூர் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம், மாநிலத்தின் வர்த்தகம், முதலீடு மற்றும் திறன் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய திருப்பமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்தும், “நீல பொருளாதாரம்” மற்றும் “பச்சை பொருளாதாரம்” ஆகியவற்றுக்கு அடுத்ததாக “ஆரஞ்சு பொருளாதாரம்” எனப்படும் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார துறைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். இசை, திரைப்படம், அனிமேஷன், கேமிங் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் போன்ற துறைகள் உலகளாவிய போட்டியில் முன்னணியில் உள்ளன; ஜோகூர் இத்துறையில் முன்னோடி நிலையைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கான எடுத்துக்காட்டாக தென் கொரியாவின் K-Pop இசைத்துறை மற்றும் ஜப்பானின் அனிமேஷன் தொழில் பில்லியன் டாலர் மதிப்பில் வளர்ந்துள்ளதை அவர் நினைவூட்டினார். அதேபோல், மலேசியாவின் “உபின் & இபின்”, “ஏஜென் அலி” போன்ற படைப்புகள் சர்வதேச ரீதியில் பாராட்டைப் பெற்றுள்ளன. ஜோகூரில் செயல்படும் இமாஜினேடிவ் இலுஷன்ஸ் மற்றும் காமன் எக்ஸ்ட்ராக்ட் போன்ற நிறுவனங்களும் நாட்டின் டிஜிட்டல் பயணத்தில் முன்னோடிகளாக உள்ளன.

மேலும், இஸ்கந்தார் மலேசியா ஸ்டுடியோஸ், Marco Polo, Crazy Rich Asians, Asia’s Got Talent போன்ற உலகத் தரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை நடத்தி, ஜோகூரின் திறமையை சர்வதேச அளவில் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“விசிட் ஜொகூர் 2026” இலக்குடன் இணைந்து, இம்மாநாடு மாநிலத்தின் இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையை உலகளவில் அறிமுகப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார். அதற்காக, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அனைவரும் மெர்சிங், டெசாரு கடற்கரைகள், ஜோகூர் பிரீமியம் அவுட்லெட், சுல்தான் இப்ராஹிம் மைதானம் போன்ற புகழ்பெற்ற இடங்களை நேரில் அனுபவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

முடிவில், டத்தோ’ ஒன் ஹஃபிஸ் காஸி, எம்டெக் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்ததோடு, ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025–ஐ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here