129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிய ஆட்சி அமைக்க மாமன்னரை சந்திப்பார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.
எங்களிடம் போதுமான எண்ணிக்கை இருக்கிறது. பிரதமர் யார் என முடிவு செய்து விட்டோம். நீங்கள் சென்று வாருங்கள் என்ற செய்தி அரசியல் சார்புடைய சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்துள்ளது.
பாக்காத்தான் கூட்டணியிம் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக துன் மகாதீர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அவருக்கு பின்னர் புதிய பிரதமராக பதவி ஏற்ற முகைதீன் யாசின் கோவிட்-19 சவாலை வெல்லும் பணியில் மக்களின் மனங்களை வென்றார்.
கடந்த மே 12 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணையை துன் மகாதீர் தாக்கல் செய்திருந்தார்.
முதலில் சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் மாட் யூசோப் நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு அனுமதி அளித்து இருந்தார். எனினும் கடைசி நேரத்தில் அந்த அனுமதி மீட்டுக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து மக்களவையில் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசிக்கு போதிய ஆதரவு இல்லையோ என்ற பேச்சு வலுக்கத் தொடங்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் துணைக் கல்வியமைச்சர் தியோ நி சிங், ” காலை வணக்கம் புத்ரா ஜெயாவிற்கு மீண்டும் வருகிறோம்” என தனது முகநூலில் பதிவேற்றம் செய்து இருந்தார். அதிலிருந்து ஆட்சி மாற்ற ஆரூடம் வலுக்கத் தொடங்கியது