பெர்சத்து வெளியேற அனுமதி தந்தேனா? துன் மகாதீர் மறுப்பு

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து வெளியேற அனுமதி தந்தேன் என்று கூறப்படுவதை துன் டாக்டர் மகாதீர் முகமது முற்றாக மறுத்தார். பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பிப்ரவரி 23ஆம் தேதி என் வீட்டில் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பாஸ், அம்னோ தலைவர்களுடன் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், அஸ்மின் அலியும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து வெளியேற நான் அனுமதி வழங்கியதைப்போல் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அன்று என் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அன்றைய கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டது உண்மைதான். பெர்சத்து கட்சி இடம்பெறும் வகையில் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சி அமைப்பதற்கு மாமன்னரைச் சந்திக்கலாம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து வெளியேறி அதன் பின்னர் புதிய கூட்டணியை அமைக்கலாம் என அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து வெளியேறுவது கடுமையான முடிவாக இருக்கும் என்று நான் கூறினேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து வெளியேறும் முடிவானது கடுமையானது என்பதால் யோசிப்பதற்குக் கால அவகாசம் கேட்டேன்.

எனக்கு ஒரு வார கால அவகாசம் தருவதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார். ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏற்கெனவே ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது என்றார் அவர்.

முதலில் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து வெளியேற வேண்டும். அதன் பின்னர் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டமாகும்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வீழ்த்துவதற்கு நாங்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் துணையாக இருந்தது.

ஆகவே பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து வெளியேறும் முடிவுக்கு நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. நஜிப்பை வீழ்த்துவதற்கு உதவிய கூட்டணியில் இருந்து நாம் எப்படி வெளியேறி மீண்டும் டத்தோஸ்ரீ நஜிப்புடன் கைகோர்ப்பது என நான் கேள்வி எழுப்பினேன்.

இந்தக் கூட்டத்தில் பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹராப்பானில் இருந்து வெளியேற நான் அனுமதி வழங்கினேன் என்று கூறப்படுவதெல்லாம் சுத்தப் பொய் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here