கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அலுவலகங்களில் கொள்ளை: கேங் பெங்காளி கும்பல் கைது

கடந்த மே மாதம் 4ஆம் தேதி புக்கிட் டாமன்சாராவில் உள்ள அலுவலகத்தில் 67 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக ஒரு பெண்மணி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

அப்புகார் தொடர்பாக கோலாலம்பூர் குற்றப்பிரிவு விசாரணைக் குழு மேற்கொண்ட நடவடிக்கையில் கிள்ளானில் வீடு ஒன்றில் ஒரு சீன ஆடவர், ஒரு ரொஹிங்யா ஆடவர், 2 இந்தியப் பெண்கள், ஒரு வங்காளதேசப் பெண், ஓர் இந்தோனேசியப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விசாரணை செய்ததில் மேலும் ஒரு சீனப் பெண்மணியை அடுக்குமாடி வீடு ஒன்றில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது இவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 3 பாராங்கத்திகள், 4 கத்திகள், 13 கைப்பேசிகள், 2 டிவி எல்சிடி, 3 மடிகணினிகள், டிவிடி பிளையர்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு 20 ஆயிரம் வெள்ளியாகும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாஸிம் தெரிவித்தார்.

மேலும் வீடு உடைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆடவன் ஒருவருக்கு 14 குற்றப் பதிவுகள் உள்ளன. இரண்டு இந்தியப் பெண்களுக்கும் இரு குற்றப்பதிவுகளும் உள்ளன என்று டத்தோஸ்ரீ மஸ்லான் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் 28 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

இதன் மூலம் கோலாலம்பூரில் 10 அலுவலக உடைப்புச் சம்பவங்களுக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் எட்டு அலுவலகக் கொள்ளைச் சம்பவங்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. கேங் பெங்காளி என்று இவர்களின் கும்பல் செயல்பட்டு வந்தது என்று டத்தோஸ்ரீ மஸ்லான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here