கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தினக்கூலி மற்றும் மாதாந்திர சம்பளத்திற்கு வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரானா பாதிப்பால் பலகட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக தங்களது ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இவ்வாறு திரும்பும் சில தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்த பகுதிகளில் உள்ள கடைகளில் கொள்ளையடித்து விட்டு தப்பும் புகார்கள் வந்துள்ளன. இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியிலிருந்து துடியலூர் பகுதியில் உள்ள தனியார் துணி கடையில் புகுந்த தொழிலாளர்கள் துணிகள், பெல்ட்டுகள் மற்றும் கடையில் உள்ள பிற பொருட்களை சாக்கு மூட்டையில் திருடியுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கோவை உள்ளிட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள பலதரப்பட்ட கடைகளிலும் இதே கொள்ளை நடைபெற்றிருக்குமோ என்று போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.