மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நூபுர கங்கையின் ரகசியம்

சித்திரை திருவிழா வரலாற்றில் முதன் முறையாக அழகர் மலைக் கள்ளழகர் மலையை விட்டு இறங்கி வைகையில் கால் வைக்காமல் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. .

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி மாதம் வரை பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதத்தில்தான் மலையை விட்டு இறங்கி வரும் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது.

சரி….

யார் இந்த மண்டூக மகரிஷி?

அவர் எப்படி மண்டூகமாக மாறினார் என்பது ஒரு புராணக் கதை.

மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்ட மகாவிஷ்ணு இந்த உலகத்தை அளக்க தனது திருவடியை மேலே தூக்கிய போது பிரம்மன், மகாவிஷ்ணுவின் பாதத்தை கழுவி பூஜை செய்தார்.

அந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணுவின் கால் சிலம்பு எனப்படும் நூபுரம் அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெறித்து அழகர்மலை மீது விழுந்தது.

 

அதுவே இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும்.

இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தார்.

பெருமாளின் நினைப்பில் இருந்ததால் சுதபஸ் முனிவர் துர்வாசரைக் கவனிக்கவில்லை. அவரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

மரியாதை தெரியாத “மண்டூகமான நீ மண்டூகமாகவே போ என சாபமிட்டார். மண்டூகம் என்றால் தவளை என்று பொருள். சாபம் பெற்ற சுதபஸ், கண்ணீர் விட்டார், கைகூப்பிய அவர், துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார்.

அதற்கு துர்வாசர், ‘வேதவதி’’ என்ற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். சுதபஸ் அதன்படியே செய்ய அவருக்கு பாபவிமோசனம் கிடைத்தது. இதுவே நூபுர கங்கையின் ஆன்ம வரலாறு.

வைகையில் இறங்கும் கள்ளழகர் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் ஆக கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லாக்கில் கிளம்பி மதுரைக்கு வருவார்.

அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். சித்ரா பௌர்ணமி தினத்தில் தல்லாகுளத்தில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வந்து ஆற்றில் இறங்குவார் கள்ளழகர்.

கள்ளழகர் அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து அலங்காநல்லூர் வழியாக வைகையில் இறங்கி தேனூர் சென்று வைகை ஆற்றில் தவமிருக்கும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பார்.

பின்னர் வண்டியூரில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் அழகர் மலைக்கு கிளம்புவார். திருமலைநாயக்கர் காலத்திற்குப் பின்னர்தான் சித்திரை திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது. கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நூபுர கங்கைக்குச் செல்வதற்கு மதுரையிலிருந்து மேலூர் வழியாக கள்ளழகர் கோயிலுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து மலைப்பாதையில் மேல் ஏறினால் பழமுதிர்ச் சோலை முருகன் ஆலயம் தென்படும். அதன் பிறகு இன்னும் சற்று மேலே போனால் ராக்காயி அம்மன் கோயில் தெரியும். ராக்காயி அம்மன் கோயிலின் உட்புரத்தில்தான் நூபுர கங்கை வழிந்தோடி வருகிறது. 

நூபுர கங்கையில் குளித்த பிறகு அங்கேயே ஆடை மாற்றிக் கொள்ள அறை வசதியையும் ராக்காயி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

நூபுர கங்கை புனித நீரை கலன்களில் அடைத்தும் விற்கிறார்கள்.

மலேசியர்கள் அதிகம் போகாத இடம் இது. நூபுர கங்கையில் குளித்து விட்டு மணக்க மணக்க விற்கப்படும் கீரை வடையை வாங்கி உண்டு ஒரு கப் தேனீர் கட்டிங்கையும் அருந்தினால் மனம் அடையும் பரவசத்திற்கு அளவே கிடையாது.

மேற்கு மலையின் மூலிகை மணமும் நூபுர கங்கையின் ரம்மியமான சூழலும் ராக்காயி அம்மன் கோயிலின் நிசப்தமான சூழலும் நமது நினைவை விட்டு அகல நீண்ட நாட்கள் பிடிக்கலாம்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here