வீட்டிற்கு விளக்கேற்ற ஒருத்தி தேவை என்பது மிகப்பழமையான சமாச்சாரம். இன்றுவரை அந்த வார்த்தை மாறவில்லை. இது மரபின் வழியாகிவிட்டது. அதே வார்தை சற்று மாறுபட்டு விளக்கேற்ற ஒருத்தி வேண்டும் என்று மருவியது.
முன்னோர்கள் கடைந்தெடுத்த தமித்தோன்றல்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கை நெறிகள். அதனால்தான் இன்று வரை அவர்கள் சொன்ன வார்த்தைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகள்.
அன்றைய சான்றோர் மக்கள் பொதுமையாகச் சிந்தித்தார்கள். புதுமையாகவும் சிந்தித்து புதியபரிணாமத்திற்கும் பழமையோடு மாறினார்கள். அந்தச்சிந்தனையில் மின்சாரம் புது வெளிச்சம் காட்டியது. மின்சாரம் தோன்றியதும் உலகம் வெளிச்சமடைந்தது, பிரகாசமானது. ஆனாலும் அந்தப்பழம் சொல் மாறவில்லை.
அந்தச்சொல் மாறாமல் வாழ்கிறதென்றால் அந்தச் சொல்லில் இருக்கும் மின்சாரம் இன்றைய மின்சாரத்திலும் வாழ்கிறது என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.
இன்றைய காலத்தில், பலரின் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு எது காரணம் என்பதும் தெரியும். ஒத்திவைப்பதால் திருமணங்கள் தாமதப் படலாம். தாமதத்தால் எந்தத்தீங்கும் நிகழந்துவிடாது. நிகழ்ந்து விடவில்லை.
ஒரு காரியம் நிறுத்தப்படும்போது இன்னொரு திறப்புக்கு வழிகிடைக்கும் என்பார்கள். திருமணங்கள் நின்றுபோனாலும் அது தடையல்ல, நின்றுபோனதற்கு நலமிக்க காரணங்கள் அதிகம் இருக்கின்றன என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.
இதன் பலன் இரட்டிப்பாகத் திரும்பக்கிடைக்கும் என்பது மிகைச்சொல்லும் அல்ல. அனுபவித்துணர்ந்த உண்மை. அதற்கான காலம் கனிந்து வருகிறது.
பல திருமண மண்டபங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. வெளிச்சமில்லாமல் இருக்கின்றன. திருமணங்களாலும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளாலும் அழகான ஒளிச்சிதறல்களை வாரி வழங்கிக்கொண்டிருந்த மண்டபங்கள் சோம்பிக்கிடந்தாலும் மீண்டும் பழமைச்சொல் புத்துயிர் பெற்றதுபோலாகிவிடும். சம்சாரப் புன்னைகயாய் வெளிச்சம் காட்டத் தொடங்கும் போது பலரின் திருமண வாழ்க்கை கொரோனா இல்லாத மின்சார வாழ்க்கையாக அமைந்துவிடும். புதிய புரிதல் மேலோங்கியிருக்கும் .
விடியல் இல்லாமல் எந்த இரவும் நீண்டதாக இல்லை. விடியப்போகிறது இரவு. முடியப்போகிறது கொரோனாவின் கதை.