ஜார்ஜ் டவுன்:
இரட்டை மாடி வீட்டில் போதைப்பொருள் பதப்படுத்தி, சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் Bootகளில் போதைப்பொருட்களை பதுக்கி, கடத்தும் ஒரு கும்பலின் மூளையாக செயல்பட்ட ஆடவரின் கைதினைத் தொடர்ந்து, அவர்களின் தந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த 27 வயது சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாயன் லெப்பாஸில் போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாக பயன்படுத்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பினாங்கு காவல் துறைத் தலைவர், டத்தோ காவ் கோக் சின் கூறினார்.
மேலும் அவ்வீட்டிலிருந்து RM2.06 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், குறித்த கும்பல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது என்றும் கூறினார்.
இந்நிலையில், “பினாங்கில் நான்கு நாட்களுக்குள் நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில் 27 மற்றும் 33 வயதுடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் நேற்று மாநில காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த சோதனையில் மொத்தம் 157,500 ரிங்கிட் மதிப்புள்ள ஆறு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“சந்தேக நபர்களின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக இருப்பதாகவும், ஆனால் அவர்களில் இருவர் முந்தைய போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகளைக் கொண்டுள்ளனர்” என்றும் காவ் கூறினார்.
நான்கு சந்தேக நபர்களும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் அக்டோபர் 27 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.



















