எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர். நிறுவனதின் 4 கோடியே 20 இலட்சம் வெள்ளி நிதிமோசடி செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஜூலை 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்களும் எதிர்த்தரப்பு வழக்கறிகளும் தாக்கல் செய்த வாதத்தொகுப்பையும் 2000 பக்கங்களுக்கும் அதிகமான எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கில் முன்வைக்கப்பட்ட அனைத்தையும் ஆதாரங்களையும் அணுக்கமாக கண்காணிக்கும் போது, டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு விட்டன என்று அரசுத்தரப்பில் வாதத்தொகுப்பை சமர்பித்த டத்தோ வி. சிதம்பரம் வலியுறுத்தினார்.
இதனிடையே, குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப், தலைமறைவாக இருக்கும் ஜோ லோ, நிக் பைசால் அரிப் கமில் ஆகியோர் மேற்கொண்ட மோசடிக்கு பலியானவர். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட எல்லா வாதங்களையும் உற்று நோக்கினால், உயர் பதவில் இருக்கும் நஜிப் தனது வங்கி கணக்கில் வந்த பணத்தை கவனிக்கவில்லையா என்பது மட்டுமே குற்றச்சாட்டாக இருந்து வந்துள்ளது.
அந்த பணம் அவரது வங்கி கணக்கில் வந்தது அவருக்கு தெரியாது என்பதுதான் உண்மை என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் சாப்பி அப்துல்லா தனது வாதத்தொகுப்பில் வலியுறுத்தினார்.