இனி கோவா இல்ல.. நேரா தாய்லாந்து தான்.. விசா தேவையில்லையாம்

பாங்காக்: இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தாய்லாந்து நாட்டு அரசு. இனி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் டூர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா ஷூட்டிங்கிற்கும் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் செல்கின்றனர்.

பெரும்பாலான இந்தியர்களின் கனவு சுற்றுலா தளமாக விளங்குகிறது தாய்லாந்து. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் தான் தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியாக, இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கான விசா தேவையை தாய்லாந்து அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவைச் சேர்ந்தவர்களுக்கும் விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் என்ற சலுகையை அறிவித்திருந்தது தாய்லாந்து அரசு.
நவம்பர் மாதம் முதல் இந்தியர்கள் தாய்லாந்திற்கு சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசின் செய்தி தொடர்பாளர் சாய் வச்சரோன்கே தெரிவித்துள்ளார். அதில், தாய்லாந்து நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையில்லை, நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை விசா நடைமுறை நீக்கப்படுகிறது.
அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி, இந்தியர்கள், தங்கள் கனவு சுற்றுலா லொக்கேஷன் பாயிண்டை கோவாவில் இருந்து மாற்றி தாய்லாந்துக்கு போட வேண்டியதுதான். விசாவே இல்லாமல் எளிதாக தாய்லாந்துக்கு டூர் செல்லலாம் என்ற அறிவிப்பு, இந்திய இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் இரண்டாவது நாடு தாய்லாந்து. முன்னதாக, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2024 மார்ச் 31ஆம் தேதி வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here