என்ன கொடுமை இது – கோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து – கர்ப்பிணி பசுவுக்கு வாய் சிதைந்தது

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்குக் கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்ததில் அதன் வாய் சிதைந்து காயம் அடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ப்பிணி யானைக்குத் தேங்காய்க்குள் வெடிமருந்து வைத்துக் கொடுக்கப்பட்டது. இது வெடித்ததன் காரணமாக அந்தக் கர்ப்பிணி யானை 2 வாரங்களுக்கு மேலாக உணவைச் சாப்பிடாமல், ஆற்றிலேயே நின்றவாறு தனது உயிரை விட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்திலும் இது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது இது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது.

பசுவுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைக்குத் தனது பக்கத்து வீட்டுக்காரரே காரணம் என அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மாவட்ட எஸ்பி தேவகர் சர்மா ” பசுவுக்கு உருளைக்கிழங்கு மாவு உருண்டைக்குள் வெடிகுண்டு பட்டாசு என்பது வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் மீதான வன்கொடுமையைச் சட்டத்தின் பிரிவு 286 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பசுவின் உரிமையாளர் மற்றும் பிற நபர்களால் பெயரிடப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here