வானூர் அருகே பிரபல ரவுடி குண்டு வீசி கொலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே இன்று காலை நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுவை மாநிலம் பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டாரமேஷ் (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது புதுவை மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு சென்றார். சின்னகோட்டக்குப்பம் அருகே சென்ற போது 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்தனர்.

சுதாரித்து கொண்ட கொட்டாரமேஷ் தமிழக பகுதியான வானூர் அருகே சின்னக்கோட்டக்குப்பம் பகுதி குடியிருப்புக்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர்.

அப்போது கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதனால் அந்த குண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியது. மர்ம நபர்களின் பிடியில் இருந்து தப்பிய கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தெருவில் உயிர் பயத்துடன் கூச்சலிட்டபடியே ஓடினார்.

சத்தம் கேட்டு அந்த கிராம மக்கள் திரண்டனர். உடனே கொட்டாரமேஷ் ஒரு குறுகலான தெருவுக்குள் புகுந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் நாட்டு வெடிகுண்டை கொட்டாரமேசின் தலை மீது வீசினர். இதில் அவர் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆத்திரம் தணியாத அந்த கும்பல் கொட்டாரமேசின் உடலில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. உடனே கிராம பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

குண்டு வீச்சில் பலியான கொட்டாரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி கொட்டாரமேஷ் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் புதுவை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட கொட்டாரமேஷ் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக அவரை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here