மியன்மார் அகதிகள் பதிவு விவகாரம்: கூட்டரசு அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறது சிலாங்கூர் மாநில அரசு!

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் உள்ள மியன்மார் அகதிகள் மற்றும் குடியுரிமையற்ற நபர்களை அகதிகள் பதிவு ஆவணத்தின் (DPP) கீழ் உள்துறை அமைச்சு (KDN) பதிவு செய்யும் வரை, அவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு காத்திருப்பதாகச் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்மார்ட்செல் (Smartsel) மற்றும் பிஜி லிங்காரன்ஃபைபர் (PG Linkaranfibre) நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீருடின் ஷாரி, “மாவட்டப் பாதுகாப்புக்குழுக்கள் மூலம் அகதிகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உலு லங்காட் மாவட்டம் தரவுகளை முடித்துவிட்டது; மற்ற மாவட்டங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டதும், அவை உள்துறை அமைச்சு மற்றும் ஐ.நா அகதிகள் முகமையின் (UNHCR) பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார் .

அகதிகள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் வணிகத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவது கூட்டரசு அரசாங்கம் மற்றும் உள்துறை அமைச்சின் அதிகார வரம்பிற்குட்பட்டது. மாநில அரசால் அவர்களுக்கு எந்தவொரு வணிக உரிமங்களையும் (Licences) வழங்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.

அகதிகளைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதில் அவர்களது நாட்டின் சம்மதமும் தேவை. அனைவரையும் ஒரே நேரத்தில் வெளியேற்றினால் அவர்கள் தெருவில் வாழும் சூழல் ஏற்பட்டு வேறு சமூகப் பிரச்சனைகள் உருவெடுக்கும் என்பதால், மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here