சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

கோலாலம்பூர்:

சிம்பாங் அம்பாட், ஜாலான் பெர்நாகாகான் ஸ்ரீ தம்பூன் பகுதியில் கடந்த மாதம் 38 வயது நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் துப்பு துலக்க உதவும் முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதாகப் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணியளவில், உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள கடை ஒன்றில் முட்டை வாங்கச் சென்ற 38 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குற்றப்பின்னணி கொண்ட அந்த நபர் இச்சம்பவத்தில் காயமடைந்தார்.

இன்று காவல்துறை மற்றும் ஈப்போ சூப்பர்பைக் கிளப் (ISBC) இணைந்து நடத்திய தொண்டு நிறுவன மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் டத்தோ டெனிஸ் லிம், “இச்சம்பவம் தொடர்பான சில முக்கியத் தடயங்கள் எங்களிடம் உள்ளன. இருப்பினும், விசாரணையின் ரகசியம் கருதி அவற்றைத் தற்போது வெளியிட முடியாது,” என்றும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை முழுமையாகச் சேகரிக்கப்படாததால், காவல்துறையினருக்கு முறையான விசாரணை நடத்தப் போதிய கால அவகாசம் அளிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here