சட்டவிரோத வியாபாரிகள் களையெடுக்கப்பட வேண்டும் – மஸ்ஜிட் இந்தியா வியாபாரிகள் கோரிக்கை

நாட்டில் புகழ் பெற்ற தொழிற்போட்டைகளில் மஸ்ஜிட் இந்தியாவும் ஒன்று. தொடக்க காலத்திலிருந்து அதிகமான மக்கள் புழங்கும் இடமாக மஸ்ஜிட் இந்தியா திகழ்கிறது என மிபா எனப்படும் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் கூறினார்.

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிறகு மஸ்ஜிட் இந்தியா மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு மொத்தம் 600 கடைகள் உள்ளன. பல்வேறு வியாபாரங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட் காலக் கட்டத்தில் தொழில்துறைகள் செயல்பட முடியாத காரணத்தால் பல வியாபாரிகள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

ஆனால் தற்போது அமலில் இருக்கும் மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையில் தொழில்துறைகளுக்கு பல்வேறு தளர்வுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் அரசாங்கம் விதித்திருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

மஸ்ஜிட் இந்தியாவும் மலேசியாவின் ஒரு சுற்றுலா தளமாக தான் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

இவ்வட்டாரத்தில் சட்டவிரோதமான முறையில் முறையான உரிமம் இல்லாதவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. நாளைடைவில் இது அதிகமாகி விட்டது. எனவே கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரைந்து இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு இங்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் கார் நிறுத்தும் இடப் பிரச்சினைக்கு டிபிகேஎல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர் உட்பட இங்குள்ளவர்கள் விருப்பத்திற்கு கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் நெரிசல் ஏற்படுகின்றன. கடைகளுக்கு முன் பகுதிகளிலும் நெரிசல் ஏற்படுகின்றன.

பொது இடத்தில் காரை நிறுத்தினால் டிபிகேஎல் அபராதம் விதிக்கிறது. ஆனால் அது குறைவான தொகை என்பதால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கார்களை நிறுத்தி வருகின்றனர். எனவே அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மஸ்ஜிட் இந்தியாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ சந்தாராவிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மீண்டும் தொழில்துறையை தொடங்கியிருக்கும் மஸ்ஜிட் இந்தியா வியாபாரிகளுக்கு டத்தோஸ்ரீ சந்தாரா முகக் கவசம், செனிடைஸர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் அவ்வாட்டாரத்தை அவர் பார்வையிட்டார்.

மஸ்ஜிட் இந்தியா எப்போது கூட்டரசு பிரதேச அமைச்சின் இதயத்துடன் நெருங்கிய தளமாகும். இங்குள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சருடன் பேசி தீர்வு காண்பதாக அவர் கூறினார்.

மேலும் அரசாங்கம் விதித்திருக்கும் நிபந்தனைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும். மஸ்ஜிட் இந்தியாவை மேம்படுத்தும் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ சந்தாரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here