உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைத் தொடங்குங்கள்

அடிப்படை வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு உதவ உலகளாவிய அடிப்படைத் திட்டத்தைத் தொடங்குங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை பி.எஸ்.எம். கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவும் நோக்கில் இதைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது வருமான ஆதாரம் இல்லாதவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தை (யூபிஐ) வழங்குவதன் மூலம் அரசாங்கம் இந்த இலக்கை அடைய முடியும்.
மலேசியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டம் ஒரு கருவியாகப் பயன்படும்.

என்ன நடந்தாலும் மலேசியாவில் யாரும் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமானம் இருக்க வேண்டும். வேலையின்றி இருந்தாலும் அவர்கள் உணவு வாங்க வருமானம் ஈட்ட முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக, மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டம் ஒன்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம். தற்போது பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மாதத்திற்கு 1,000 வெள்ளிக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள்.

ஆனால், அடிப்படை வருமானம் இல்லாமல் இருப்பவர்கள் இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள். யாரும் பட்டினி கிடப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

மக்களை வேலை செய்யாமல் இருக்க ஊக்கப்படுத்தக்கூடாது என்பதால் உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 1,000 வெள்ளியை முன்மொழிகிறோம். அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும்.

பொருளாதாரம் தொடர்ந்து இயங்க வேண்டும். நாம் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும். இந்தச் சலுகையினால் மக்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
எனவே உலகளாவிய அடிப்படை வருமானத் தொகை குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழே இருக்க வேண்டும். ஆனால் மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியம் மிகப்பெரிய அளவில் இல்லாததால் இதைத் தொடரலாம்.

இதுபோன்ற திட்டங்களுக்கு அவசரத் தேவை இருப்பதால் இந்தக் கொள்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஊதிய மானியங்கள் போன்ற தற்போதைய அரசாங்கக் கொள்கைகள், முறையான தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.

அதேசமயம், பால்மரம் சீவும் மற்றும் கிராமத்தில் இதர வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்கள் தற்போதைய பல அரசாங்கக் கொள்கைகளிலிருந்து அதிகம் பயனடையவில்லை. அரசாங்கத்தின் பணம் பல சிறு தொழில்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மக்கள் இன்னும் உணவின்றித்தான் இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் திருத்தப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். உணவு இல்லாத குடும்பங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இப்போது நமக்கு இது அவசியம் என்று டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here