புலவர் புலமைப்பித்தன்

கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணத் தேவருக்கும் தெய்வானையம்மாளுக்கும் 06/10/1935 அன்று மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி.

 

ஒருமுறை இந்தி வாத்தியார் விளையாட்டாகஇவன் ஒரு பைத்தியக் காரன்எனத் திட்டியிருக்கிறார் , “ஆம் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன்என்று கூறியவர் புலமைப்பித்தன் என தனக்கு புனைபெயர் சூட்டிக் கொண்டார்.

 

கோவை சூலூர் பகுதியில் ஒரு நூற்பாலையில் வேலைபார்த்துக் கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். பின் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த புலமைப்பித்தனுக்கு , இயக்குநர் கே. சங்கர் குடியிருந்த கோயில் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பளித்தார்.

 

 

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்யார்?

என்ற பாடலை எழுதினார் புலமைப்பித்தன்.

 

இந்தப் பாடலை அவர் படப்பிடிப்புத் தளத்தின் அறையில் அமர்ந்து எழுதவில்லை. மாறாக தியாராயநகரில் ஒரு சாலையின் ஓரம் வீதியிலே நின்று எழுதினார். இந்தப் பாடலை எழுதியபோது இவரது வயது 30. சாரதா படப்பிடிப்பு நிலையில் இப்பாடல் பதிவு செய்யப்படுகிறது. அந்நேரம் வரை மெல்லிசை மன்னருக்கோ பாடலைப் பாடிய சௌந்தரராஜனுக்கோ  கவிஞர் யாரென்பது தெரியாது. இயக்குநர் சங்கருக்கு மட்டுமே தெரியும்.

 

அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

எம்.ஜி.ஆர் தனது படங்களில் புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று ஒரு காலத்தில் திரைப்பட பாடல் எழுதுவது தொடர்பாக கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

 

அதே போல்..எஸ். படித்து விட்டு பியூன் வேலை செய்வதற்குச் சமமான ஒரு விபத்துஎன்று தான் பாடலாசிரியராக மாறியதைப் பற்றிக் கூறியிருக்கிறார் புலமைப்பித்தன்.

 

இலக்கிய அந்தஸ்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தவன் நான் தான்எனத் தமிழ் செருக்கோடு கூறிய புலமைப் பித்தனின் பாடல்கள் சில

 

1)அழகென்னும் ஓவியம் இங்கேஊருக்கு உழைப்பவன்
2) ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வாஅடிமைப் பெண்
3) கங்கைநதியோரம் ராமன் நடந்தான்வரப்பிரசாதம்
4) அமுத தமிழில் எழுதும் கவிதைமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
5) தென்றலில் ஆடும் கூந்தலில்மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
6) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் எனஊரும் உறவும்
7) நீங்க நல்லா இருக்கணும்இதயக்கனி
8) இன்பமே உந்தன் பேர் பெண்மையோஇதயக்கனி
9) பொன்னந்தி மாலைப் பொழுதுஇதயக்கனி
10) என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்பல்லாண்டு வாழ்க
11) இன்று சொர்க்கத்தின் திறப்பு விழாபல்லாண்டு வாழ்க
12) பூமழை தூவிநினைத்ததை முடிப்பவன்
13) எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவாகுமரிக்கோட்டம்
14) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைநீயா
15) உனது விழியில் எனது பார்வைநான் ஏன் பிறந்தேன்
16) ஓடி ஓடி உழைக்கணும்நல்ல நேரம்
17) நீ என்னென்ன சொன்னாலும் கவிதைநேற்று இன்று நாளை
18) பாடும் போது நான் தென்றல் காற்றுநேற்று இன்று நாளை
19) நேருக்கு நேராய் வரட்டும்மீனவநண்பன்
20) கண்ணழகு சிங்காரிக்குமீனவநண்பன்
21) சிரித்து வாழவேண்டும்உலகம் சுற்றும் வாலிபன்
22) நாளை உலகை ஆளவேண்டும்உழைக்கும் கரங்கள்
23) இந்த பச்சைக்கிளிக்கொருநீதிக்குத் தலைவணங்கு
24) இனியவளே என்று பாடி வந்தேன்சிவகாமியின் செல்வன்
25) எத்தனை அழகு கொட்டிக்கிடக்குதுசிவகாமியின் செல்வன்
26) ஒரு சின்னப் பறவைமதன மாளிகை
27) சோளம் வெதைக்கையிலேபதினாறு வயதினிலே
28) அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரேகோவில் புறா
29) இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்நல்ல பெண்மணி
30) முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்ஆணிவேர்
31) தென்பாண்டிச் சீமையிலேநாயகன்
32) கஸ்தூரி மான் குட்டியாம்ராஜநடை
33) நானொரு பொன்னோவியம் கண்டேன்
34) செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்துஇதய மலர்
35) மண்ணில் வந்த நிலவேநிலவே மலரே
36) ஒரு புல்லாங்குழல் என்னை அம்மாதாலிதானம்
37) பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியேதீபம்
38) ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுதுமதனமாளிகை
39) தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்இளஞ்சோடிகள்
40) ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோதங்கமகன்
41) கண்மணியே பேசு மெளனம் என்ன கூறுகாக்கிச் சட்டை
42) முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருகதர்மத்தின் தலைவன்c
43) அட்ரா மேளத்தை ராசாதிசைமாறிய பறவைகள்
44) சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்துடிக்கும் கரங்கள்
45) அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசாஉன்னால் முடியும் தம்பி
46) புஞ்சை உண்டு நஞ்சை உண்டுஉன்னால் முடியும் தம்பி
47) உன்னால் முடியும் தம்பிஉன்னால் முடியும் தம்பி
48) சாதிமல்லிப் பூச்சரமேஅழகன்
49) கோழி கூவும் நேரம் ஆச்சுஅழகன்
50) மழையும் நீயேஅழகன்
51) சங்கீத ஸ்வரங்கள்அழகன்
52) ஒரு குள்ள நரி புல்லுக்கட்டுசட்டம் ஒரு இருட்டறை
53) உன்னை நம்பி நெத்தியிலேசிட்டுக்குருவி
54) மான் கண்டேன் மான்கண்டேன்ராஜரிஷி
55) என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போடசக்களத்தி
56) சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்கா கோயில் மணிமல்லுவேட்டி மைனர்
57) அந்தப்புரத்தில் ஒரு மகராணிதீபம்
58) சங்கத்தில் பாடாத கவிதைஆட்டோ ராஜா
59) நீ ஒரு காதல் சங்கீதம்நாயகன்
60) பூந்தென்றல் காற்றே வாமஞ்சள் நிலா
61) நான் பிடிச்ச மாப்பிள்ளைதான்முந்தானை முடிச்சு
62) அடி வண்ணக்கிளியேமிருதங்க சக்கரவர்த்தி
63) வெண்மேகம் விண்ணில்நான் சிகப்பு மனிதன்
64) பட்டுவண்ண ரோசாவாம்கன்னிப் பருவத்திலே
65) உச்சி வகுந்தெடுத்துரோசாப்பூ ரவிக்கைகாரி
66) மரகதத் தோரணம் வாசலில் அசைந்திடபிள்ளையார்
67) எனது ராகம்பொண்டாட்டி தேவை
68) அழகே உன்னைக் கொஞ்சம்வாலிபமே வா வா
69) குக்குக்கூ கூவள்ளி
70) அடியெடுத்துவிடிஞ்சா கல்யாணம்
71) தேவமல்லிகைப் பூவேநடிகன்
72) மாலை செவ்வானம்இளையராஜாவின் ரசிகை

 

 

 

தமிழ்த்திரையுலகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில் பாடலாசிரியர்கள் குறித்து எழுதுவது சற்றே சிரமமான காரியமாய் இருக்கிறதுகாரணம் பாடலாசிரியர்கள் குறித்த தகவல் திரட்டு அத்தனை எளிதானதாய் இருப்பதில்லைகாட்சி ஊடகங்கள்,பண்பலை வானொலிகள் தொடங்கி இணையம் வரை திரைப்பாடல்கள் குறித்து பெற முடிகிற தரவுகளில் அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் ஆகியவையே பெரும்பாலும் இருக்கின்றன

 

ஒரு பாடலின் மெட்டுக்கு ஜீவனாய் இருப்பவை வரிகள்.அந்த வகையில் இசையமைப்பாளருக்கு அடுத்த இடத்தில் பாடல்கள் குறித்தான தகவல்களில் இடம்பெற வேண்டியது பாடலாசிரியரின் பெயராய் இருக்க வேண்டும்அப்படியிருக்க பெரும்பாலும் ஊடகங்கள் பாடலாசிரியர்களின் பங்களிப்பைப் பற்றி பெரிதாய் கண்டுகொள்ளாதது குறித்து எப்போதும் பெரிய வருத்தம் உண்டு

 

பாடலாசிரியர்கள் பெயர்கள் இடம்பெறாமல் போவதன் பின்னணியில் காரணம் ஒன்றை யூகிக்கலாம்.

 

ஒரு திரைப்பாடலின் உருவாக்கத்தில் பாடலாசிரியர் பற்றிய குறிப்பு இடம் பெறும் இடங்கள் இரண்டுஒன்று திரைப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளிவரும் ஒலிபேழைகளின் உறை மற்றொன்று திரைப்படத்தின் தொடக்கத்தில் அத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கு பெற்றோரின் பெயர்கள் வருகிற டைட்டில் கார்ட்.

 

ஒரு திரைப்படத்தின் மொத்த பாடல்களையும் ஒரே பாடலாசிரியர் எழுதியிருந்தால் இக்குறிப்புகள் போதுமானவைஆனால் ஒரே திரைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியகள் பங்கு பெறும்போது , இன்ன பாடலை இன்னார் எழுதியது என்று தெளிவான தகவல்கள் இல்லாமல் பொதுவாக பாடலாசிரியர்கள் என்று அச்சடித்திருப்பார்கள்

 

ஒலிப்பேழைகளில் ஒவ்வொரு பாடலையும் பாடியவர்கள் குறித்து தனித்தனி தகவலை அச்சிடுபவர்களுக்கு கூடுதலாய் பாடலாசிரியர் பெயரை அச்சிடுவதில் என்ன சிரமமோ (மிக அரிதாக சில ஒலிப்பேழைகளிலும்டைட்டில் கார்டிலும் தனித்தனியே குறிப்பிட்டிருப்பார்கள்).இப்போதைய டிவிடி கலாச்சாரத்திலும் இந்த போக்கு தொடர்வது மாற்றிக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்ஊடக திரைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடலாசிரியர்களின் பெயர் இடம்பெறாமல் போக இந்த குழப்பமும்கூட காரணமாய் இருக்கலாம்.

 

மிக ரசித்து சிலாகிக்கும் பாடல் வரிகள் நமக்கு அத்துனை பரிட்சயம் இல்லாத ஒரு பாடலாசிரியருக்கு சொந்தமானது என்று அறிய வரும்போது நமக்குள் ஒரு ஆச்சரிய மின்னல் தோன்றுமில்லையா?

 

அப்படியான மின்னல் தோரணங்களுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள்

 

புலமைப்பித்தன் பரிட்சயமில்லாத பெயரா என்பவர்களுக்கு அறுபதுகளின் இறுதிலும் எழுபதுகளிலும் மிக பிரபலமாய் இருந்திருந்தாலும் அதற்கு அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு பாடலாசிரியர் என்றாலே திரைப்பாடல்களை அதிக எண்ணிக்கையில் எழுதிக்குவித்த வாலியும் , வைரமுத்தும்தான் நினைவிற்கு வருவார்கள் என்பதை நினைவு கூறுகிறோம்.  

 

எம்.ஜி.ஆர் அவர்களின் முத்திரைப் பாடல்களாக அறியப்படுகின்ற ’நான் யார் நீ யார்’, ’நாளை உலகை ஆள வேண்டும்’, ’நீங்க நல்லா இருக்கோணும்’,’சிரித்து வாழ வேண்டும், ஒன்றே குலமென்று’ போன்ற பல பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன்

 

சிவப்புச் சிந்தனைவாதியான புலமைப்பித்தனின் பொதுவுடமை சித்தாத்தங்களை தாங்கிய வரிகளுக்கு ரசிகரான எம்.ஜி.ஆர்தனது திரைப்படங்களில் புலமைப்பித்தனுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கி முன்னணி பாடலாசிரியராக வளர்த்துவிட்டார்எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கின் வளர்ச்சியில் புலமைப்பித்தனின் வரிகளுக்கும் பங்கு உண்டு என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

 

பொதுவாக கம்யூனிச சிந்தனைவாதிகள் எப்போதும் போராட்ட குணத்தோடும் புரட்சி கருத்துக்களை ஆக்ரோஷமாய் வெளிப்படுத்துபவர்களாகவுமே அறிவோம்.ரசனை சார்ந்த விஷயங்களில் அவர்களைப் பற்றி யோசனையே செய்ய இயலாத ஒரு பிம்பம்தான் நமக்குள் உறைந்திருக்கும்ஆனால் புலமைப்பித்தன் அவர்கள் திரைப்பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்களை கொடுத்தற்கு நிகராக ’பாடும்போது நான் தென்றல் காற்று’, ’நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’,’ஆயிரம் நிலவே வா’ என காதல் பாடல்கள் எழுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இன்னொரு ஆச்சர்யம்

 

அடிப்படையில் தமிழாசிரியர் என்பதால் அதன் பொருட்டு அவருக்கிருந்த இலக்கிய வாசிப்பை அவர் எழுதும் காதல் பாடல்களில் பிரதிபலிப்பதில் உணரலாம்.எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்கூட ரசனைக்குரிய பல காதல் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்அவற்றில் மிகப் பிரபலமான பல பாடல்கள் இருந்தும் அவை புலமைப்பித்தனின் வரிகள் என பெரும்பாலானோர்க்குத் தெரிவதில்லைஇந்தக் கட்டுரையின் நோக்கம்கூட எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் புலமைப்பித்தனின் முத்திரைகளை அலசுவதாய் கொள்ளலாம்.

 

புலமைப்பித்தன் குறித்த நம்முடையத் தேடலும்கூட தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளிவந்த ராஜா கைய வச்சா திரைப்படத்தின் ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா’ பாடலில்

 

உலகம் எங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்கு சாட்சி

நிலமும் வானும் நமது ஆட்சி

உலகம் எங்கும் அதற்கு சாட்சி

 

என்ற இந்த வரிகளின் வார்த்தை விளையாட்டை ரசித்ததிலிருந்துதான் தொடங்கியதுஇது வாலியின் விளையாட்டாகத்தான் இருக்குமென்று உறுதி செய்ய தேடியதில் புலமைப்பித்தன் என்று அறிந்து ஆச்சர்யம்.

 

அதன் தொடர்ச்சியாய் புலமைப்பித்தனை தேடுகையில் அடுக்கடுக்காய் ஆச்சர்யங்கள்.தனது அகவை முப்பதுகளில் இருக்கும் பொழுது முதிர்ச்சியான சிந்தனைகளை பாடல்களில் கொடுத்தவர் அகவை அறுபதுகளில் இருக்கும்போது இளமையான காதல் வரிகளால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

 

ஈரமான ரோஜாவே படத்தின் ’அதோ மேக ஊர்வலம்’ பாடலின் மெட்டும் இசைக்கோர்ப்பும் தெய்வீக அம்சம் பொருந்தியதாக உணர வைக்கக்கூடிய வகையில் இசையமைத்திருப்பார் இளையராஜா.

 

அந்த பாடலில் காதலியின் முகத்தை நிலவுக்கும்கூந்தலை மேகத்திற்கும் என நிறைய தேய் வழக்கு உவமைகளைத்தான் பயன்படுத்தியிருப்பார்  புலமைப்பித்தன்

 

ஆனாலும் ‘உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்என்று மயிர் கூச்செரிய வைக்கும் அற்புதமான கற்பனைகளையும் கட்டவிழ்த்துவிட்டு தனது வரிகளால் அந்த பாடலை வேறொரு உச்சத்திற்கு நகர்த்தியிருப்பார்இதே பாடலில் ‘இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்என்று விவகாரமான வரியொன்று வரும்அந்த வரியினை கேட்கும் தோறும் காமம் சார்ந்து அழகியலோடு எழுதுவதில் புலமைப்பித்தனின் சிந்தனையே ஒரு ராஜகோபுரம் என்று தோன்றும்

 

காதல் பாடல்களில் காம ரசத்தை சொட்ட சொட்ட தோய்த்துக் கொடுப்பதில் புலமைப்பித்தனை கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில் வைக்கலாம்காதலும் காமமும் ஒன்றைவிட்டு ஒன்று அல்ல என்பதை இவரின் காதல் பாடல்களில் ஒளிந்து நின்று கண்ணடிக்கும் குறும்பு வரிகளில் உணரலாம்புரிந்து கொள்ளும் ரசனைக்காரர்களிடம் குறுநகையொன்றைக் களவாடிச் செல்லும் இயல்பைக் கொண்டவை அவைஉதாரணமாக தங்க மகன் படத்தின் ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோபாடலில் இந்தத் தன்மையை கவனிக்கலாம்.

 

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண் அசைவில் ஒரு பாவம்

 

இந்த வரிகளில் ஏதேனும் விரசம் தெரிகிறதாஆனால் அது உணர்த்தும் பொருளை நேரடியாகச் சொன்னால் அது விரசமாகிவிடும்இப்படி காமத்தை மறை பொருளாய் பாடல் வரிகளில் கடத்துவதில் புலமைப்பித்தன் ஒரு ஜித்தன்

 

இதே பாடலில் ‘மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே’ என்ற ஒரு வரியிருக்கும்இந்த ’தொட்டில் மாங்கனி’ உவமையைசிவா படத்தின் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போவது’ பாடலில் ‘தொட்டில் இடும் இரு தேமாங்கனி’ என்றாக்கி அதையும் ரசிக்க வைத்திருப்பார்

 

நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் ‘ வசந்த ராஜா’ பாடலில் தான் பயன்படுத்திய ’வெண்பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்’ என்ற வரியைத்தான் ‘அதோ மேக ஊர்வலம் பாடலில் ‘உனது பாதம் அடட இளவம் பஞ்சு’ என்று ஆக்கியிருப்பார்இப்படி தாங்கள் எழுதிய வரிகளையே மீண்டும் பயன்படுத்திக் கொள்வதற்கு வாலி,வைரமுத்து தொடங்கி அனேக பாடலாசிரியர்களுக்கும் உதாரணங்கள் சொல்லலாம்

 

ஆனால் அவற்றை எப்படி மீள பயன்படுத்துகிறார்கள் என்கிற இடத்தில்தான் புலமைப்பித்தன் போன்ற பாடலாசிரியர்கள் ரசிக்க வைக்கிறார்கள்சிவா படத்தின் ’அடி வான்மதி’,இது நம்ம ஆளு படத்தின் ’காமதேவன் ஆலயம்மற்றும் ‘அம்மாடி இதுதான் காதலா’ போன்ற பாடல்களும் இந்த காலக்கட்டத்தில் புலமைப்பித்தனின் வரிகளில் குறிப்பிடப்பட வேண்டியவை.

 

அத்திக்காய் காய் காய்”,”வான் நிலா நிலா அல்ல”,”பார்த்தேன் சிரித்தேன்” போன்ற திரைப்பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் கையாண்ட சுவாரசிய   சொல் விளையாட்டை அதன் பின் நிறைய பாடலாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள்புலமைப்பித்தனும் தன் பங்கிற்கு கொடுத்து அசத்திய அற்புதமான பாடல் மௌனம் சம்மதம் படத்தின் ‘கல்யாண தேனிலா’.இந்த பாட்டில் பல வரிகளை மேற்கோள் காட்டி சிலாகிக்கலாம்குறிப்பாய் ,

 

உன் பார்வை தூண்டிலா

நான் கைதி கூண்டிலா” என்ற வரிகளின் கவித்துவம் இப்பாடலின் உச்சம் என்பேன்.

 

புலமைப்பித்தன் எழுதிய காதல் பாடல்களில் பலருக்கும் விருப்பப் பாடலாய் ஒன்று இருக்குமென்றால் அது நாயகனின் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலாய்த்தான் இருக்கும்அதனைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் காதல் பட்டியல் நிறைவு பெறாதுஎத்தனையோ முறை கேட்டு ரசித்த பாடல்தான் என்றாலும் பாடலில் ஒளிந்திருந்த சுவாரசியம் ஒன்றை சமீபத்தில் அறிய நேர்ந்து இன்னும் கூடுதலாய் ரசிக்கத் தூண்டியதுஅந்த சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும் வரிகள் இவைதான்.

 

இசை மழையெங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

 

எங்களின் ஜீவன்கள்என்று பன்மையில் வர வேண்டியது ஜீவன் என்று ஒருமையில் வருவதை மேலோட்டமாய் பார்த்தால் பிழை எனத் தோன்றும்ஆனால் புலமைப்பித்தனின் கவிச்சிந்தனை விளையாடிய இடம் இதுதான்காதலில் கலந்துவிட்ட பிறகான நிலை ஈருடல் ஓருயிர் என்பதுதானேஇந்த வரி கொண்டிருக்கும் சுவாரஸ்யமும் அதுதான்.

 

பூவைச் சூட்டும் கூந்தலில்

எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட

தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?’

இந்த வரிகளில் இருப்பது காதலா அல்லது காமமா இல்லை இரண்டுமா எப்படி பிரித்தெடுக்கஇப்படியான வரிகளைக் கேட்கும் போது வாலிக்கு அள்ளிக் கொடுத்த இளையராஜா புலமைப்பித்தனுக்கும் ஐம்பது சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறதுஇருப்பினும் கௌரவமான எண்ணிக்கையிலான வாய்ப்புகளை ராஜா புலமைப்பித்தனுக்கு வழங்கியிருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

 

எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் பொதுவுடமை தத்துவப் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் அதன் பின் காதல் பாதையிலேயே அதிகமாய் பயணித்துக் கொண்டிருக்கையில் வெளிவந்தது பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பி திரைப்படம்இத்திரைப்படத்தின் ’புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலில்,

 

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை

யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது

ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே

வீடின்றி வாசலின்றி தவிக்குது

 

என்ற வரிகளில் நாட்டில் நிலவும் வர்க்கப் பாகுபாடு குறித்தும்,

 

உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலில்,

 

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்

சாராய கங்கை காயாதடா

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்

காசுள்ள பக்கம் பாயாதடா

என்று மது ஒழிப்பிற்கு முட்டுக் கட்டையாய் இருக்கும் அரசியல் சூழலை நையாண்டியாய் தோலுரித்தும்,

 

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா’ பாடலில்,

அம்மா பசி என்றொரு கூக்குரல்

அதுதான் இனி தேசிய பாஷை

கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே

கஞ்சிப் பானை தெருவில் இங்கே

சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு

 

நாட்டின் வறுமைச் சூழலையும் பற்றி தனது சிவப்புச் சிந்தனையால் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் பலவற்றையும் தொட்டு பொட்டில் அடித்தாற் போன்று காத்திரமான வரிகளால் விளாசியிருப்பார்.

 

பாலச்சந்தரின் அழகனிலும்கூட இது தொடர்ந்தது, “சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே” பாடலில்,

 

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ” என்று சுயநலமாய் வாழ்தல் குறித்து ஏளனமாய் கேள்வி கேட்டு,

 

கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது

கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்” என்று அறிவுரை வழங்கியிருப்பார்.

 

அழகன் படத்தைச் சொல்லும்போது அதில் மற்ற பாடல்களான ‘சங்கீத ஸ்வரங்கள்’,’மழையும் நீயே’,’தத்தித்தோம்’ ஆகியவற்றின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ‘சங்கீத ஸ்வரங்கள்’ பலருக்கும் விருப்பப் பாடல் என்றாலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு தடதடத்து ஓடும் சந்த நடைக்கு பாடல் எழுதுவது அவருக்கு மிகப்பிடித்த விஷயம் என்பதால் ’தத்தித்தோம்’ பாடலை அவர் மிக ரசித்து எழுதியிருக்க வேண்டும்

 

”கண்ணில் பேசும்

சங்கேத மொழியிது

கண்ணன் அறிய ஒண்ணாததா?

உன்னைத் தேடும்

ஏக்கத்தில் இரவினில்

கண்ணுக்கிமைகள் முள்ளாவதா?”

 

என்று தடதடவென பயணிக்கும் இந்த சந்த நடையில் எத்துனை கவித்துமாய் உட்கார வைத்திருக்கிறார் சொற்களை

 

கோயில் புறா படத்தின் ’வேதம் நீ இனிய நாதம் நீபாடலில் மேற் சொன்னது போன்றே அடுக்கடுக்காய் செல்லும் சந்தத்திற்கு,

 

நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது

நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது

ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்

மனம் குணம் அறிந்தவள்

குழலது சரியுது சரியுது

குறுநகை விரியுது விரியுது

விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

 

என்று சொற்களை அடுக்கி ரசிக்க வைத்திருப்பார். ’மண்ணில் வந்த நிலவே’ பாடலிலும்கூட ’நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே’ என்று ஒரே மாதிரி அடுக்கப்பட்டிருக்கும் சந்தத்தில் அந்தாதியில் விளையாடியிருப்பார்.

 

சோகப் பாடல்களிலும் குறிப்பிடும்படியான பல பாடல்களை எழுதியிருக்கிறார் புலமைப்பித்தன் அவர்கள்சின்னவீடு படத்தின் ‘வெள்ள மனம் உள்ள மச்சான்’,ஊர்க்காவலன் படத்தின் ‘ஆத்துக்குள்ளே தீ புடிச்சா’, அண்ணா நகர் முதல் தெரு படத்தின் ‘என்ன கத சொல்லச் சொன்னா’ என ஒரு பட்டியல் நீளும்.’ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி’ அவரின் சோக வரிகளில் மாஸ்டர் பீஸ் எனலாம்

 

இந்தப் படத்தில் கதையின் நாயகன் தனது சோகத்தை யாரிடமேனும் சொல்லி அழ வேண்டும் போல மன அழுத்தத்தில் இருப்பான்ஆனாலும் அவனுக்கான சோகத்தை வெளிப்படையாயும் சொல்லவிட முடியாதபடியான சூழலுக்கு தமிழாசிரியரான புலமைப்பித்தன் இரட்டற மொழிதல் அணியினைக் கொண்டு அந்த பாடலில் அந்த நாயகனின் மனக்குமுறலை வெளிக்கொணர்ந்திருப்பார்.

 

இதே வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு பாடல் ஆறே வரிகளையே கொண்டிருந்தும் என்றும் நிலைத்து நிற்கப்போகும் நாயகனின் ‘தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே’.

 

 கூகூ என்று குயில் கூவாதோ’,’கண்மணியே பேசு’, ‘சந்தத்தில் பாடாத கவிதை‘ போன்ற இன்னும் எத்தனையோ சிலாகிக்க வேண்டிய பாடல்களை இந்த கட்டுரையின் நீளம் கருதி மனமில்லாமல் கடந்து போகிறோம்.

 

இன்றும் இவர் இளைய தலைமுறைக் கவிஞர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது 85ஆவது வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். வடிவேலு நடித்த எலி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் இவர் எழுதியவைதாம். இளைய தளபதி விஜய் நடிப்பில் வந்த தெறி படத்தில் ஒலித்த தாய்மை பாடலும் இவர் எழுதியதுதான்.

 

 

இத்தனை சிறப்பான பங்களிப்பை செய்திருக்கும்/செய்துகொண்டிருக்கும் புலவர் புலமைப்பித்தன் போன்றோரை வளரும் இளைய தலைமுறை பாடலாசிரியர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுகண்ட சொற்களையும் இட்டு நிரப்பி நானும் பாடலாசிரியர் என்று கிளம்பும் திடீர் பாடலாசிரியர்களின் அர்த்தமற்ற வரிகளுக்கும் தலையாட்டும் இன்றைய இளைய தலைமுறையின் ரசனையை உயர்த்தினால்திரையிசைப் பாடல்களை சிலாகித்து கொண்டாடும் எங்களைப் போன்று நாளை உங்களையும் கொண்டாட ஒரு தலைமுறை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here