வெண்ணிலாவில் கால் வைத்தாற்போல வெனிலாவில் கொடி நாட்டும் ரீயூனியன் தமிழன்

*எம்.ஆர்.பி

 

வெண்ணிலாவில் கால் வைப்பதற்கு நிகராக வெனிலா செடிகளை விற்று பெரும் பணக்காரர் பட்டியலில் உலா வந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் ரீயூனியன் தீவில் வசிக்கும் தமிழர்கள்.

உலகளவில் இந்தியர்கள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம். கல்வி, வேலைவாய்ப்பு, தனிப்பட்ட தேவைகள் போன்றவற்றுக்காக இந்தியாவை விட்டு வெளியேறும் நாட்டினர் உலகெங்கிலும் பரவிக்கிடக்கின்றனர். அவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் என்றுதான் கூற வேண்டும்.

தெற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கையில் அதிகம் வசிக்கும் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐக்கிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் என பல நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

எனினும், தமிழ்நாட்டிற்கு அதிகம் பரிச்சயம்  இல்லாத இடம், தமிழகத்தில் பலர் கேள்விப்படாத இடத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது உங்களுக்கு தெரியுமா..? அது ஒரு தீவு என்பது இங்கே சுவாரசியமூட்டும் மற்றொரு செய்தி.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்கு அருகில் உள்ள தீவுதான்  ’ரீயூனியன்’.

சுமார் 65 கி.மீ நீளமும், 45 கி.மீ அகலத்தை கொண்டுள்ள இத்தீவில் சுமார் 8.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

மொத்தமாக 2.500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த தீவில் 2.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். அதாவது தீவில் மொத்த மக்கள் பரப்பளவில் இது மூன்றில் ஒரு பங்காகும். இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடிபெயர்ந்த தமிழர்களில் மகிழ்ச்சியாக வாழ்வது இங்கு மட்டும்தான் சாத்தியமானது.

கரும்பு மற்றும் வெனிலா செடி சாகுபடிக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த நிலத்தைப் பெற்றார்கள். குடும்ப மேன்மைக்காக அடிமை போல உழைத்தார்களோ அந்த நிலம் பிரான்ஸ் அரசாங்கத்தால் தமிழர்களுக்கு உரிமையாக்கப்பட்டது. இங்கு மட்டுமே தமிழர்கள் சாதிய பாகுபாடு இன்றி மகிழச்சியுடன் வாழ்கிறார்கள். உலகத் தமிழர்களிலேயே இந்த ஒரு தீவில் மட்டுமே அதாவது நாட்டில் மட்டுமே தமிழர்கள் போதுமான செல்வத்துடன் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இவர்களால் நடவு செய்யப்படும் வெனிலா செடிகள்தான் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெனிலா ஏற்றுமதி மூலம் இவர்கள் மிகப் பெரிய  செல்வந்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மிக தொலைவில் இருந்தாலும் கூட, இந்த தீவு அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. 1927ம் ஆண்டு இன்றைய புதுச்சேரி பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், ரீயூனியன் தீவிலுள்ள கரும்புத் தோட்டங்களில் பணியாற்றிட அன்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்று சொந்த உழைப்பின் வாயிலாக பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.

புதுச்சேரி மற்றும் ரீயூனியன் தீவுகள் இரண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. இந்தியா மட்டுமில்லாமல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பகுதியில் இருந்தும் இங்கே குடியேறினார்கள். இந்த மக்களின் சந்ததியினரே தற்போது இம்மண்ணின் மைந்தர்களாக உள்ளனர்.

இங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழர்களும் பிரெஞ்சு மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை பிரெஞ்சு தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர்.

ஆப்பிரிக்க மற்றும் பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் கலந்துவிட்டாலும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். தைப்பூசம், பொங்கல், ஆடி 18 போன்ற தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளை இவர்கள் விடாமல் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை நூறு முறைக்கு மேல் நெருப்பு பிழம்புகளை கக்கியுள்ள இரண்டு எரிமலைகள் இந்த தீவின் சிறப்பம்சம். இப்பகுதியைச் சுற்றிலும் அழகான காடுகள், வளம் நிறைந்த மலைகள் உள்ளன. உலகிலெயே சிறப்பான மழைப்பொழிவு இருக்கும் இடமாகவும் ரீயூனியன் திகழ்கிறது.

இங்கு வசிக்கும் மக்கள் இந்தியாவுக்கு விடுக்கும் கோரிக்கை ஒன்றும் உள்ளது. தமிழர்களாக இருந்தாலும், இங்கு இருக்கும் பலருக்கும் முறையாக தமிழ் பேசி பழக்கமில்லை. அதனால் தமிழும், இசையும், தமிழக இலக்கியங்களையும் தங்களுக்கு கற்றுத்தர இந்திய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here