கரூரில் 250 அடி உயர டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற முத்து

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்து வயது 50. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு, கரூர் மாவட்டம், தென்னிலைப் பகுதியில் தங்கி கட்டட வேலையைப் பார்த்து வந்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், வேலை இல்லாமல் தவித்து வந்தார். தனது குடும்பத்துக்கு சாப்பாடு வழங்க முடியாமல் அல்லல்பட்டு வந்தார்.

நேற்று மதியம் முத்து, அந்தக் கட்டட கான்ட்ராக்டரிடம் போய், தனக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தொகை முழுவதையும் உடனடியாகத் தருமாறு கேட்டிருகந்தார் என்று தெரியவந்தது. அதற்கு அந்த கான்ட்ராக்டர் மறுப்பு தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். இதனால் கோபமான முத்து, தென்னிலை காவல் நிலையத்துக்குப் பின்புறம் உள்ள 250 அடி உயரமுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு ஏறி, தற்கொலை முயற்சியில் இறங்கினார். இதைப் பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், தென்னிலைக் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அரவக்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் தகவல் கொடுத்து, அவர்களையும் வரவழைத்தனர். டவரில் ஏறிய தீயணைப்பு வீரர்கள், முத்துவைக் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால் முத்துவோ, ‘கட்டடக் கான்ட்ராக்டரிடமிருந்து எனக்கு வரவேண்டிய முழுச் சம்பளத் தொகையையும் பெற்றுத் தாங்க. அப்போதுதான், கீழே இறங்குவேன்’ என்று பயமுறுத்தினார். ‘நீங்க கீழே இறங்குங்க. உடனே, உங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தொகையைப் பெற்றுத் தருகிறோம்’ என்று சொல்லிப் பார்த்தனர்.

ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு முத்து செவிசாய்க்கவில்லை. இதனால், தென்னிலைக் காவல்துறையினர், கட்டடக் கான்ட்ராக்டரிடம் போய், முத்துவுக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தொகையைப் பெற்று வந்தனர். அதனை தீயணைப்புத் துறை வீரர்கள், செல்போன் டவரின் உச்சிக்குச் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த முத்துவிடம் வழங்கினர்.

அதன்பிறகே, முத்து தற்கொலை முயற்சியைக் கைவிட்டு, கீழே இறங்கினார். அவர் பத்திரமாகக் கீழே இறங்கிய பின்னரே, போலீஸாரும் பொதுமக்களும் பெருமூச்சுவிட்டனர். இதுசம்பந்தமாக, தற்கொலைக்கு முயன்றதாக முத்து மீது, தென்னிலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here