நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைத் துடைத்தொழித்து மலேசியர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப ஏதாவது ஒரு வேலையில் இணைந்து வருமானம் ஈட்டுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமை அனைத்து தரப்பினருக்கும் இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கருத்துரைத்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில் 20 லட்சம் பேர் வரை வேலை இல்லாமல் தவிக்கக்கூடும் என சில கணிப்புத் தகவல்கள் வெளிவருகின்றன. இதனை முறியடிக்க மனிதவள அமைச்சு பல பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
ஒருவேளை வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கினால் அதனால் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சினைகளில் அனைவரும் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அந்தச் சுழ்நிலையைத் தவிர்க்க மனிதவள மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும் பயிற்சிகளில் கலந்து பயன்பெறுபவர்கள் பின்னாளில் தங்கள் திறனுக்கு ஏற்ற வேலையில் அமர்வது உறுதி செய்யப்படும்.
அதே சமயம் பயிற்சி பெற்ற பின்னரும் வேலை கிடைக்காமல் அவர்கள் திண்டாடினால் இந்தப் பயிற்சித் திட்டத்தின் இலக்கை அடைய முடியாத சுழ்நிலையும் ஏற்படலாம் என நேற்று மனிதவள அமைச்சின் கீழ் தருவிக்கப்படும் 5 பயிற்சித் திட்டங்களின் அறிமுக விழாவில் தலைமையேற்ற அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
தொழில்திறன், மறுபயிற்சி, சிறுதொழில் மேம்பாடு, பி40 பிரிவினர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு என அந்த ஐந்து திட்டங்களின் வழியாகப் பயிற்சிப் பெறுபவர்களுக்கு 20,000 வரையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க 10 உள்நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
வருங்காலங்களில் இந்த இலக்கு இரட்டிப்பாக உயர மனிதவள அமைச்சு செயல்படுகின்றது. இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிவரை புதிய அந்நியத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது.
உள்நாட்டினரிடையே வேலை இல்லாத் திண்டாட்டம் பெருமளவில் இருக்கும்போது அந்நியர்களை வேலைக்கு அமர்த்துவது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வாய்ப்பினை மலேசியர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக அது எந்த வேலையாக இருந்தாலும் ங்ட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மலேசியர்களுக்கு வேண்டும்.
தங்களுக்குப் பிடித்த வேலைக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் கிடைத்த வேலையில் அமர்ந்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய சுழ்நிலை உள்ளது என்றும் அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.