பெட்டாலிங் ஜெயா: பிரதமருக்கான “மகாதீர்-அன்வர்” கலவையை பி.கே.ஆர் நிராகரித்ததையடுத்து பக்காத்தான் பிளஸிலிருந்து விலகுகிறேன் ஆனால் டிஏபி மற்றும் அமானாவுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். பார்ட்டி பிரிபூமி பெர்சத்துவில் வெறியேற்றப்பட்ட அவர் இன்று காலை ஒரு சீன நாளிதழுக்கு வழங்கிய வீடியோ நேர்காணலில் போது மேற்கண்ட தகவலை கூறினார்.
பக்காத்தான் பிளஸ் என்பது பக்காத்தான் கட்சிகள் (பி.கே.ஆர், டி.ஏ.பி மற்றும் அமானா), வாரிசான் மற்றும் டாக்டர் மகாதீர் தலைமையிலான எம்.பி.க்கள் அடங்கிய தளர்வான கூட்டணியைக் குறிக்கிறது. எதிர்கால ஒத்துழைப்பு குறித்த மேல் பேச்சுவார்த்தைகளுக்கு பி.கே.ஆரையோ அல்லது அதன் தலைவர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிமையோ தொடர்பு கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
“நான் அவருடன் (அன்வார்) ஒத்துழைக்க மாட்டேன். ஏனென்றால் அவர் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. பிரதமராக ஆவதற்கு நான் வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். வேறு வழியில்லை!
“அவர்கள் இவ்வளவு காலமாக எதிர்க்கட்சியில் இருந்தனர். நான் அவர்களுடன் சேருவதற்கு முன்பு, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள், ஆனால் அவர்கள் தோற்றார்கள், அவர்களால் வெல்ல முடியவில்லை.
“நான் அவர்களுடன் GE14 இல் சேர்ந்தேன், போதுமான மலாய் ஆதரவுடன் நாங்கள் வென்றோம். அவர்கள் வெற்றிபெற மலாய் வாக்குகள் தேவை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள், பெர்சத்து ஒரு மலாய் கட்சி, மலாய்க்காரர்கள் பல இனக் கட்சிகளை ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில் நான் அவர்களுக்கு மலாய் வாக்குகளை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
டிஏபி மற்றும் அமானாவுடன் அவர் தொடர்ந்து பணியாற்றுவாரா என்று கேட்டபோது, முன்னாள் பிரதமர் “ஆம்” என்று கூறினார், ஏனெனில் அவர்கள் அவரை பிரதமராக ஆதரித்தனர்.
அண்மையில் சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஆசியாவுக்கு அளித்த பேட்டியின் போது, டாக்டர் மகாதீருக்கு ஒரு மூத்த அமைச்சர் அல்லது அமைச்சர் வழிகாட்டல் பதவி குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக அன்வார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வேறு எந்த நிலைப்பாட்டையும் ஏற்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக தெரிவித்தார்.