மனைவி மீதான கோபத்தால் குழந்தையைக் கொன்ற தந்தை

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரைமங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இவரின் மனைவி வேம்பு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன் – மனைவியிடையே அடிக்கடிக் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வேம்பு கோபித்துக்கொண்டு அவரது சொந்த ஊரான காரைக்கால் மாவட்டம் ஊழியப்பத்து கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, உறவினர்கள் சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை உணவு சமைப்பது தொடர்பாக கணவன் – மனைவியிடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பாரதிமோகன் மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தன் ஒன்றரை வயது குழந்தையைத் தூக்கி தரையில் அடித்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்து போனது.

இதுகுறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய தரப்பில் கேட்டபோது, “கணவன்- மனைவி பிரச்னையால் குழந்தையை அடித்துக் கொன்ற பாரதிமோகனைக் கைது செய்துள்ளோம். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here