கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தில் உள்ள 5 முக்கியப் பகுதிகளில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, காற்று மாசடைவு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளது.
மலேசியக் காற்று மாசடைவு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (Apims) அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, சரவாக்கில் உள்ள செரியான் (Serian) பகுதியில் அதிகபட்சமாக 156 என்ற அளவில் API குறியீடு பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கூச்சிங் (154), ஸ்ரீ அமான் (152), சமரஹான் (113) மற்றும் மூக்கா (106) ஆகிய பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களின் தகவல்படி, 58 பகுதிகள் மிதமான அளவிலும் (API 51 – 100), 5 பகுதிகள் நல்ல நிலையிலும் (API 50-க்கும் கீழ்) பதிவாகியுள்ளன.
இதில் API 0 முதல் 50 வரை நல்ல நிலைமையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையையும் குறிக்கும். 300-ஐத் தாண்டினால் அது ஆபத்தான நிலைகளாகக் கருதப்படும்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 68 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களின் மூலம் மணிநேரத்திற்கு ஒருமுறை API தரவுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.























