சர்வதேச மாநாடுகளின் கீழ், சித்திரவதைக்குத் தடை விதிப்பத்ற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நேற்று அரசுக்கு கோரிக்கை வைத்தது.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (யு.டி.எச்.ஆர்) 1948 இன் படி, மலேசியாவின் மத்திய அரசியலமைப்பின் 5ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் சித்திரவதைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுஹாகாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பு மையங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, கைதிகளின் தடுப்பு விகிதத்தைக் குறைப்பதே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருத்தப்படுகிறது.
சித்திரவதை மனிதாபிமானமற்றது. அனைத்து புகார்கள் , அறிக்கைகள் பற்றிய உடனடி விசாரணையை உறுதிசெய்ய வேண்டும். அதன்பிறகு நம்பகமான சான்றுகள் கிடைக்கும்போது சர்வதேச தரத்திற்கு ஏற்ப வழக்கு , விசாரணை செயல்முறைகளைச் செயல்படுத்துதல் வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சித்திரவதைச் செயல்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் ரத்துசெய்து, அதற்கு பதிலாக உடல் ரீதியான காயம் ஏற்படாத, அபராதங்களுடன் அதை மாற்ற அரசாங்கத்தை சுஹாகாம் வலியுறுத்தியது.
சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்துடன் இணைந்து இந்த அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.