கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, பட்டாசு வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள சோகோ (Sogo) வணிக வளாகத்திற்கு முன்னால் அசாம் பாகிக்கு எதிராக எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. சுமார் 300 பேர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தின் தொடக்கக் கட்டத்தில், திடீரென பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் சசாலி ஆடம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். பட்டாசு வெடித்தது தொடர்பாக நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்தோடு அவர்கள் அனைவரும் தற்போது போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ‘வெடிபொருள் சட்டம்’ பிரிவு 6 மற்றும் 8-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்த புலனாய்வு அறிக்கை தற்போது சட்டத்துறை தலைவரிடம் (Attorney-General’s Chambers) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பணியாற்றிய அசாம் பாக்கி, தனது 42 ஆண்டுகால பொதுப்பணியை நிறைவு செய்து இன்று (மே 12) அதிகாரப்பூர்வமாகப் பணி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.





















