தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டு பின்னர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தை ஒரு கொலை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 6 பேர் இந்தியர்கள், 4 பேர் மலாய்க்காரர்கள், ஒருவர் வங்காளதேச நாட்டவர் என்று சிலாங்கூர் குற்றப்புலனாய்வு துறை தலைவர் டத்தோ ஃபட்சில் அகமட் இன்று கூறினார்.
இவர்கள் அனைவரும் 20 முதல் 56 வயதிற்குட்பட்டவர்கள் என்ற அவர், வங்காளதேச நபருக்கு ஜூலை 9 ஆம் தேதி வரையிலும் ஓர் இந்திய நபருக்கு ஜூலை 6ஆம் தேதி வரையிலும் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இன்னொர் ஆடவரின் தடுப்பு காவலை நீட்டிபதற்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வர்த்தக் கடன் விவகாரத்தால் இக்கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கும் சாத்தியத்தை போலீசார் நிராகரிக்கவில்லை.
சவப்பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடத்த சட்டம் மற்றும் பீனல் கோர்ட் பிரிவு 302 கீழ் இக்கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் துப்பு துலக்கப்படுகிறது. புலன் விசாரணையின் முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்படாலாம் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் டத்தோ என்ற அந்தஸ்தை கொண்ட ஒரு பிரபல தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான ஒருவரது தடுப்பு காவல் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது.
டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஜாலான் பெர்சியாரான் பெர்டாணா பாண்டார் டாமான்சாராவில் உள்ள விளையாட்டு பூங்காவில் மெது ஓட்டத்தில் ஈடுப்பட்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.
ரவாங்கில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் நான்காவது நாளில் உயிரிழந்தார். 17 நாட்களுக்கு பின்னர் அவருடைய உடல் ரவாங் அருகே ஒரு புதறில் கண்டு பிடிக்கப்பட்டது.
உடல் மோசமான நிலையில் அழுகி போய் இருந்தது. கிட்டத்தட்ட எலும்புக் கூடாக அவரது உடல் மீட்கப்பட்டு உடல் கூறு பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.