கொரோனாவை தடுப்பதற்கு 141 தடுப்பூசிகள் உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிரம்

எங்கே போகிறது கொரோனாவின் பாதை என்று உலகளாவிய விஞ்ஞானிகளாலேயே கணித்துச்சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அதன் ஆட்டம், உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பரில் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய இந்த கொலைகார வைரஸ், இதுவரை 1 கோடியே 7 லட்சத்துக்கும் அதிகமானோரின் உடல்களில் புகுந்து இருக்கிறது. ஒவ்வொரு விநாடியும் பல்லாயிரக்கணக்கானோரின் உடல்களில் புகுந்து கொண்டிருக்கிறது. இதுவரை 5 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களையும் பலி வாங்கியாயிற்று.

24 மணி நேரத்தில் 4700 பேர் வீதம் என்ற அளவுக்கு உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நம்பகமான தடுப்பூசிதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, இஸ்ரேல் என உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

சபாஷ், சரியான போட்டி என்று சொல்லத்தக்க வகையில் ஒவ்வொரு நாடும் முதல் தடுப்பூசியை தாங்கள் தான் சந்தைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இப்படி உலகமெங்கும் 141 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதையே உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோமும் உறுதி செய்துள்ளார்.

இதையொட்டி அவர் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கொரோனா வைரசின் மரபணு வரிசை ஆன்லைனில் பகிரப்பட்டதில் இருந்தே தடுப்பூசி உருவாக்கும் பணி தொடங்கி விட்டது. 141 தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. முன்னணி தடுப்பூசிகள் வெற்றி பெற இன்னும் சில மாதங்களே ஆகலாம். நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்கிறார்.

இந்த நிலையில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறார்கள், அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸரும், ஐரோப்பிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோ என்டெக்கும். இவ்விரு முன்னணி நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது, பொறுத்துக்கொள்ளத்தக்கது, நோயாளிகளின் உடல்களில் ஆன்டிபாடிகளை உருவாக்கக்கூடியது என தெரிய வந்திருக்கிறது.

Covid-19: N.Y. deaths slow; least Italy case since March 10 | The ...

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு 2 ‘ஷாட்’ செலுத்தி பார்த்ததில் அவர்களது உடல்களில் உருவான ஆன்டிபாடியின் அளவு, கொரோனா வைரஸ் தொற்று பாதித்து குணமானவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்று செலுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களில் உருவான ஆன்டிபாடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

இதுபற்றி அமெரிக்காவின் பேய்லர் மருத்துவ கல்லூரியின் தடுப்பூசி விஞ்ஞானி பீட்டர் ஹோட்டஸ் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “பைஸர் நிறுவனத்தார் தங்களது தடுப்பூசி பற்றிய முதல் சோதனை தரவை வெளியிட்டிருப்பதை பார்க்கிறபோது மகிழ்ச்சி தருகிறது. 2 டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு பிளாஸ்மா மூலம் கிடைக்கிற ஆன்டிபாடிகளை விட அதிகளவில் ஆன்டிபாடி அடையப்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் அங்கம் வகித்துள்ள அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “இந்த தடுப்பூசி, மனித செல்கள் ஏற்பி பிணைப்பு ஆன்டிஜன்களை, அதாவது கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீன் பகுதியை உற்பத்தி செய்ய வைக்கிறது. இதன்மூலம் அது மனித செல்களில் நுழைய முடியும். இந்த தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைத்திருப்பதை காண முடிந்தது” என்கிறார்கள்.

Malaysiakini - Speed of Covid-19 deaths shocks doctors as New York ...

பிஎன்டி162பி1 என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் உடலில் 1.8 முதல் 2.8 மடங்கு அதிகளவிலான ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புச்சக்தி) உற்பத்தியாகி உள்ளது. இது கொரோனா வைரசை வீழ்த்துவதற்கு போதுமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இந்த தடுப்பூசி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிற கேத்ரின் யு ஜான்சன், பிஎன்டி162பி1 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை தரவுகள் எங்களுக்கு ஊக்கம் அளிக்கின்றன. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி முடிவுகளை விரைவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகையில் வெளியிடுவதை எதிர்பார்க்கிறோம் என்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள பயோஎன்டெக்கின் இணை நிறுவனரான உகுர் சாஹின், “மனிதர்களுக்கு கொரோனா வைரசை வீழ்த்தக்கூடிய அளவுக்கு ஆன்டிபாடியை எங்களது தடுப்பூசி உற்பத்தி செய்ய வைக்கும் என்று கிடைத்துள்ள ஆரம்ப கட்ட தரவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகிறது. இன்னும் கூடுதல் தரவுகளை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்கிறார்.

18 வயது முதல் 55 வயது வரையில் உள்ள 45 ஆரோக்கியமான நபர்களுக்கு பிஎன்டி162பி1 தடுப்பூசி செலுத்தி மதிப்பீடு செய்யப்பட்டதாக பைஸர் நிறுவனத்தார் கூறுகின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் யாருக்கும் எந்தவொரு தீவிர பாதிப்பும் ஏற்படவில்லை.ஆக எந்த தடுப்பூசி முதலில் சந்தைக்கு வரும் என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. எந்தளவுக்கு விரைவாக நம்பகமான தடுப்பூசியை கொண்டு வர முடியுமோ, அந்தளவுக்கு விரைவாக கொண்டு வர வேண்டும், அப்போதுதான் கொலைகார கொரோனாவிடம் இருந்து மனித குலம் தன்னை காத்துக்கொள்ள வழி பிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here