மக்களே பதில் கூறத்தக்கவர்கள்!

குப்பைகள் என்பது குப்பையான செய்தியாகவே இருக்கிறது. மக்களின் அலட்சியம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. குப்பைகளுக்காக கிள்ளான் நகராண்மைக் கழகம் 1,000 குப்பைத்தோம்புகளைக் கொள்முதல் செய்திருக்கிறது. இதற்காக 1.5 மில்லியன் தொகையைச் செலுத்தியிருக்கின்றனர்.

இப்படிச் செய்வது நகராண்மைக்கழகத்தின் கடமைகளில் ஒன்றுதான். நகரின் குப்பைகளைக் கொட்ட தோம்புகளும் அவசியம் என்பதிலும் எந்தத்தடையும் இல்லை.

இந்தத் தோம்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியமும் அதற்குச் செலவு செய்த 1.5 மில்லியன் பணமும் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்குப் பதில் இருந்தாலும் மக்களின் பொறுப்பற்ற செயலுக்கான தண்டச் செலவு என்று கூறினால் ஏற்குமா?

தோம்பு இல்லை, இடம் இல்லை, குப்பைகளை எங்கேதான் வீசுவது என்கின்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சுலபமான பதில் ஒன்று இருக்கிறது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் சாக்கடை, அல்லது குப்பைக் கொட்டக்கூடாது என்ற இடம், தெருவோரம் என்று ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. என்று பதில் சொல்லலமா?

இந்த இடங்களில் குப்பைகள் கொட்டுவது நியாயமா? முறையா என்று கேட்டால் என்ன பதில்வரும்? குப்பைகள் போடுவதில் முறையான நடைமுறையப் பழக்கப்படுத்திக் கொள்ளாதவர்களாகவே மக்களின் குணம் இருக்கிறது. குப்பைகளை வீசுமுன் அவற்றை முறைப்படுத்தி பைகளில் கட்டி சேர்க்க வேண்டிய கொள்கை அற்றவர்களாகவே மாறிப் போனதினால் வந்த வினை இது.

கொரோனா காலத்தில் அரசு சொன்னதை மக்கள் எஸ் ஓ பி என்று ஏற்றுக்கொண்டார்கள், புதிய மீட்பு நடைமுறை என்றும் ஏற்றுக்கொண்டார்கள். குப்பை விஷயத்தில் மட்டும் கோட்டை விடுவது ஏன்?

மாநகர் மன்றத்தின் வேலை இது என்ற அலட்சியத்தின் விலை 1,5 மில்லியன் வெள்ளி என்பது கிள்ளான் பகுதிக்கு மட்டுமே. மற்ற இடங்கள், நாடுமுழுக்க என்று கணக்கிட்டால் பணம் கோடிக்கணகக்கைத் தாண்டும் பாழாகும் விதம் எப்படி என்பதற்குப் பதில் கிடைத்துவிடும்.

சாலையோரத்தில் குப்பைத் தோம்புகள் வைத்தாலும் நிரம்பிவழியத்தான்போகிறது. இதை மாற்றுவதற்கு மக்களின் மனம்தான் முதலில் மாறவேண்டும்.

மக்களின் மனம் மாறாதவரை குப்பைகளின் நாற்றம் குறையவே குறையாது. மாற்றுவழி என்ன என்பதை பொதுமக்களிடமே கேட்கலாம். அவர்கள் கூறும் பதிலே விடையாக மாறும்!

குப்பைகளைக் கொண்டுவந்து உரிய இடத்தில் கொட்டுகின்றவர்களுக்குக் கணிசமான தொகை வழங்கினால் நகரில் குப்பைகள் இயல்பாகவே குறைந்துவிடும் அதிசயம் நடக்கும். சிறுரக லோரி உரிமையாளர்கள் பம்பரமாய்ச் சுழல்வார்கள். குப்பைகள் அகற்றும் குத்தைகைகள் தேவைப்படாது.

இதற்கான வழிமுறைக்கு எஏ ஓ பி வரையறுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here