மூன்று மாதங்களில் 13 யானைகள் பலி

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.

உடல்நலிவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த 8 வயது ஆண் யானையும் இன்று உயிரிழந்துள்ளது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள சிறுமுகை வனச்சரகத்தில் மட்டுமே 5க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளுக்குள் நடக்கும் மோதல், வலசைப்பாதைகள் ஆக்கிரமிப்பு, மனித விலங்கு மோதல், நோய்த்தொற்று ஆகிய காரணங்களால் இப்பகுதியில் யானைகள் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த யானைகளின் உடல்களை ஆய்வு செய்யும்போது அவற்றின் வயிற்றுப்பகுதி, குடல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பாகங்களில் நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் கோவை மாவட்ட வன கால்நடை அலுவலர், மருத்துவர்.சுகுமார்.

“உயிரிழந்த யானைகளின் உடல்களை ஆய்வு செய்ததில் வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்தொற்று இருப்பது, பெரும்பாலான யானைகளிடம் கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உணவு அல்லது சுத்தமான தண்ணீர் உட்கொள்ளாத பட்சத்தில் இது போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும். எனவே, நோய்த்தொற்று காரணமாக சில யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.”

“யானைகளின் இறப்பு குறித்து கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, வனப் பகுதிகளுக்குள் யானை உயிரிழந்து சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு துர்நாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் யானையின் உடல் மீட்கப்படுகிறது. உடல் பாகங்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருக்கும். எனவே, மேற்புற காயங்களை தவிர்த்து, எதனால் அவை உயிரிழந்தன என்பதை கண்டறிவது, உரிய ஆய்வுக்கு பின்னர் தான் தெரியவரும். தற்போது, உயிரிழந்துள்ள 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை கடந்த ஐந்து நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தது.

இதன் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இறப்பிற்கான காரணம் ஆய்வு செய்யப்படும். மேலும் தொடர்ச்சியாக நிகழும் யானை உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவர்குழு சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கிறார் மருத்துவர் சுகுமார்.
கோவை வனக்கோட்டத்தில் நிகழ்ந்து வரும் தொடர் யானை மரணங்கள் குறித்து வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் மாவட்ட வனத்துறையினர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

பிபிசியிடம் இதுகுறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட கோவையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் வனம்.எஸ்.சந்திரசேகர், “விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட, திறமைமிக்க வன அலுவலர்களை வனத்துறையில் நியமித்து வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து மனித விலங்கு மோதலை தவிர்க்க வேண்டும். வனத்துறையில் உள்ள மருத்துவக்குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மிக முக்கியமாக யானை, சிறுத்தை, புலி, கடைமான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடித்து செல்லும் இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில், கழிவுகளும் ரசாயனங்களும் கலப்பதை தடுக்க வேண்டும்” என்கிறார். “மேலும், மலைப்பகுதியின் அருகே விவசாயம் செய்து வரும் பொதுமக்களிடம் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைதுசெய்து நடவடிக்கை வேண்டும்” என கோரிக்கை வைக்கிறார் இவர்.

காடுகளை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் வரும் நாட்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறுகிறார் இயற்கை ஆர்வலர் ராமமூர்த்தி.
“யானைகள் அதன் எடையின் 10 சதவீத அளவிற்கு உணவுகளை தினமும் உட்கொள்ளும்.100 முதல் 150 லிட்டர் தண்ணீர் தினமும் பருகும். யானைகள் ஒரே இடத்தில் தங்கக்கூடிய விலங்குகள் இல்லை. அவை தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும்.

தற்போது, யானைகளுக்கு தேவையான உணவும் கிடைப்பதில்லை, சுத்தமான தண்ணீரும் கிடைப்பதில்லை, அவை நடந்து செல்லும் வலசை பாதைகளும் விவசாயநிலம் மற்றும் கட்டடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் யானைகளின் வாழ்க்கைமுறை பாதிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், யானைகளின் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்” என எச்சரிக்கிறார் இவர்.

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் உயிரிழப்பு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் உண்மையான காரணங்கள் குறித்து தெரிந்துகொள்ள மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷிடம் பேசுகையில், “கடந்த பத்து வருடங்களாக கோவை வனக் கோட்டத்தில் உயிரிழந்த யானைகளில், 80 சதவீதம் நோய்வாப்பட்டு உயிரிழந்தவை. தற்போது உயிரிழந்துள்ள 12 யானைகளில், மூன்று யானைகள், யானைகளுக்குள் நடந்த மோதலின் காரணமாகவும், ஒரு யானை குழியில் விழுந்து விபத்து ஏற்பட்டதாலும், மற்றொரு யானை பிரசவத்தின் போதும் உயிரிழந்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த யானைகளின் வயிறு மற்றும் குடல் பகுதியில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. யானைகளின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here