மக்கள் தொகை கணக்கெடுப்பு -2020

மலேசிய மக்கள் தொகை , வீட்டுவசதி கணக்கெடுப்பு 2020  (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020) செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கிறது. இது அரசாங்கத்தின் தேவைகளை ஒழுங்கமைப்பதற்கும் மலேசியர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கும் உதவும் ஒரு விரிவான  சேகரிப்பாகும்.

கணக்கெடுப்பு  1963 முதல் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை செயல்படுத்தப்படும் மக்கள் தொகைக்கான தரவாகும். பொது மக்களுக்கு நன்மை பயக்கும் முன்னுரிமைகள் வழங்கும் உத்திகளை அரசாங்கம் கோடிட்டுக் காட்ட முடியும் என்று தலைமைப் புள்ளிவிவர நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஜீர் முஹிதின் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டு, மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதற்கு இக்கணக்கெடுப்பு மிக அவசியமாகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் இறுதியில் அரசாங்க முடிவுகள், திட்டங்கள்  விரிவான கொள்கைகள் வடிவங்கள் பெறும்.

இந்த ஆண்டு  280 மில்லியன் வெள்ளியில் வருடாந்திர பட்ஜெட் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதில் எவ்வாறான திட்டங்கள் மக்களுக்காக இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.  எடுத்துக்காட்டாக, பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் அல்லது எந்தத் துறைகளுக்கு முன்னுரிமை அல்லது கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பெரிதும் உதவும்.

மலேசியா மக்கள் தொகை கணக்கெடுப்பு தினத்துடன் இணைந்து   பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஜூலை 7 ஆம் தேதி புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில்  இந்நிகழ்ச்சியைத் தொடங்கவுள்ளார்.

ஒன்பது மில்லியன் குடியிருப்புகள் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், சாலைகள், பயன்பாடுகள் , தீயணைப்புத் துறை , காவல்துறை போன்ற பாதுகாப்பு சேவைகள் குறித்த  வசதிகளையும் சேவைகளையும் வழங்க அரசாங்கத்திற்கு  கணக்கெடுப்பு உதவக்கூடும் என்று முகமட் உசிர் கூறினார்.

கிராமப்புறங்கள் உட்பட வளர்ச்சி,   தொழில்நுட்பத்தில் யாரும் விடப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக மக்களுக்கு வேலை வாய்ப்புகள், வருமானம் குறித்த நீண்டகால திட்டங்களை வழங்குவதற்கும் இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும்.

வளரும் தேசமாக உருவாக மலேசியாவில் மூத்த குடிமக்கள், விவசாயம், ஐஆர் 4.0  உயர் பொருளாதாரம் போன்ற பல கொள்கைகளை உள்ளடக்கியதாக கணக்கெடுப்பு இருக்கும்.

எனவே, வருங்கால சந்ததியினர் இன்னும் விரிவான, ஒழுங்கமைக்கப்பட்ட நன்மைகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, அனைத்து இனங்களும் ஒத்துழைத்து சரியான, நேர்மையான தகவல்களை வழங்குவார்கள் என்று முகமட் உஜீர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

32.7 மில்லியன் மலேசிய மக்களை உள்ளடக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும், முதல் ஜூலை 7 முதல் செப்டம்பர் 30 வரை ஆன்லைனில் (இ-சென்சஸ்) நடத்தப்படும், இரண்டாவது அக்டோபர் 7 முதல் அக்டோபர் 24 வரை நேருக்கு நேர் நேர்காணல் மூலம் நடத்தப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020ஐ கையாள்வதில் மொத்தம் 115,685 பணியாளர்கள் ஈடுபடுவார்கள், இதில் 99,356 தணிக்கையாளர்கள், 14,581 மேற்பார்வையாளர்கள், கமிஷனர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் ,மாவட்ட கண்காணிப்பாளர்கள் அடங்கிய 1,385 மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் என பணியில் இருப்பர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் 2020 அறிக்கை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மலேசிய மக்களின் புள்ளிவிவர அம்சங்கள் குறிப்போடு முழுமையான தகவல்களுடன் வெளியிடப்படும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here