கொன் இயோ – குவான் எங் இடையிலான உரசல் பினாங்கை பெரிக்காத்தான் நேஷனல் வசமாக்குமா?

பி.ஆர். ராஜன்

ஜசெக தலைவர்களான லிம் குவான் எங், சௌ கொன் இயோ ஆகிய இருவரும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளையும் உரசல்களையும் ஓரங்கட்டிவிட்டு மாபெரும் முதலீட்டு இலக்காக பினாங்கை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ப. ராமசாமி வலியுறுத்தினார்.

இந்த இருவர் உடனான கருத்து வேறுபாடுகளால் அவர் ஜசெகவிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கொன் இயோவும் குவான் எங்கும் சிறந்த நண்பர்கள் கிடையாது. ஆனால், பினாங்கு நலன்களில் இவர்கள் இருவருக்குமே அதீத அக்கறை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து பினாங்கின் சாத்தியப்பூர்வமான, வளப்பம் நிறைந்த எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அறிவுப்பூர்வமாகவும் விவேகமாகவும் சிந்திக்க வேண்டும்.

மாறாக, ஆரோக்கியமற்ற உரசல்களும் மனகசப்புகளும் இருவருக்கிடையிலான பகைமையை மேலும் வளர்ப்பதாக மாறிவிடும். இது பினாங்கின் வளமிக்க எதிர்காலத்தைக் காயப்படுத்தி மோசமான விளைவுகளைக் கொண்டு வந்துவிடும் என்று இங்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

இந்த உரசல்களும் பிணக்குகளும் தொடருமாயின் வரும் தேர்தலில் பினாங்கு பெரிக்காத்தான் நேஷனல் வசமாகும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்திடும்.

ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஒரு பக்குவப்பட்ட முதிர்ச்சியடைந்த தலைவராக இல்லை. இந்த இரு தலைவர்களுக்கிடையிலான பிணக்குகளை தீர்த்து வைப்பதற்குரிய தைரியமும் அனுபவமும் அவரிடம் இல்லை.

குவான் எங் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கின்ற நிலையில் பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சருமாவார். 2018 பொதுத்தேர்தலுக்குப் பிறகு கொன் இயோ பினாங்கு மாநில முதலமைச்சராக இருந்து வருகிறார்.

கொன் இயோ– குவான் எங் இடையிலான உறவில் சில காலமாகவே விரிசல் அடைந்திருக்கிறது. ஆரோக்கியமான நட்பு அவர்களிடம் இல்லை.

பினாங்கிற்கு வரவேண்டிய இன்டர்கிரேட்டட் சர்கியூட் (ஐசி) வடிவமைப்புத் திட்டம் கைநழுவி சிலாங்கூர் மாநிலத்திற்கு சென்றது குறித்து கொன் இயோவிடம் குவான் எங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உயர்தொழில்நுட்ப முனையம் என்ற அந்தஸ்தை பினாங்கு மெல்ல இழந்து வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்பதை ராமசாமி சுட்டிக்காட்டினார்.

பினாங்கு மாநிலம் அதன் போட்டித் தன்மையை இழந்து வருகிறது. ஐசி வடிவமைப்புத் திட்டம் சிலாங்கூருக்குச் சென்றதில் ஆச்சரியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here