இல்லத்தில் யானைத் தந்தம்! மகாதீர் உடைத்தால் மண் சட்டி மக்கள் உடைத்தால் பொன் சட்டியா?

மகாதீர் இல்லத்தில் யானைத் தந்தங்களை அழகுபடுத்தி வைத்திருப்பது  புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதை புகைப்படமெடுத்து டுவிட்டர் பக்கத்தில் மகாதீர் பதிவு செய்ய பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

புகைப்படத்திற்கு மிக அண்மையில் மகாதீர் கைகளைக் கட்டிக் கொண்டு தொலைக்காட்சியை பார்க்கிறார்.

தூரத்தில் யானையின் இரண்டு தந்தங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

காட்சியைக் கண்ணுற்ற மக்கள் கதறி வெகுண்டு விட்டார்கள்.

நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒருவர் எப்படி பாதுகாக்கப்படும் வனவிலங்கான யானையின் தந்தங்களை வீட்டில் அழகுபடுத்தி வைத்திருக்க முடியும்  என்பதுதான் இன்றைய நாளில் இணைய பயன்பாட்டாளர்களின் அதிமுக்கிய விவகாரமாக எழுந்திருக்கிறது. 

வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம். வனவிலங்குகளை வேட்டையாடி அதனை வீட்டில் அழகுப் பொருளாக வைத்துக் கொள்வதும் குற்றம்.

குற்றத்தை யார் செய்தாலும் குற்றம் குற்றமே.

நெற்றிக்கண் இப்போதெல்லாம் யாருக்குத் திறக்கிறது குற்றத்தை குற்றம் என்று சொல்ல என்ற கேள்வியும் எழலாம் என்ற கோணத்தில் மகாதீர் வீட்டுத் தந்தங்கள் குறித்த சந்தங்கள் பல்வேறு சந்தேகங்களோடு பறக்கத் தொடங்கி விட்டன.

மலேசியர்களை கட்டுப்படுத்தும் சட்டம் மகாதீரை மட்டும் எப்படி கட்டுப்படுத்தாமல் போனது என இணைய பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“நாட்டு மக்களுக்கான சட்டம் சரியாகப் பாய்கிறது. தலைவர்களைப் பார்த்தால் மட்டும் தலைதெறிக்க ஓடி விடுகிறது” என்பன போன்ற கண்டனங்கள் மகாதீரைக் குறிவைத்துப் பாய்ந்து கொண்டே வருகின்றன.  

இல்லத்தை அலங்கரித்துக் கொள்ள ஒரு முன்னாள் பிரதமர் என்ற வகையில் மகாதீருக்கு முழு உரிமை உள்ளது என சொல்ல வந்தால் 2010ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய விதிகளை நுழைத்து புதிய சட்டத்தைக் கொணடு வாருங்கள்.

அவர் இல்லத்தில் தென்படுவது ஆப்பிரிக்க யானையின் தந்தங்களாக இருக்கலாம். அதனை அவர் விலை கொடுத்து வாங்கியிருக்கலாம் எனவும் பேசப்படுவதால் அது மட்டும் குற்றம் ஆகாதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

வனவிலங்குகளை வேட்டையாடுவதும் அதன் பாகங்களை அழகுக்கு வைத்திருப்பதும் குற்றமல்ல என்பதை மகாதீர் சொல்லாமல் சொல்கிறாரா அல்லது சட்டம் என்பது மக்களுக்குத்தானே தவிர எனக்கு அல்ல என நமக்கு சோமபானம் ஊற்றுகிறாரா எனவும் சிந்திக்க வைக்கிறது.

சட்டம் என்பது சரிசமமாக அனுசரிக்கப்படுவது கிடையாதோ என்ற தோற்றத்தையும் மகாதீர் இல்லத்துத் தந்தங்கள் காட்டுகின்றன.

தந்தங்கள் வளைந்திருக்கின்றன. ஒரு யானையின் உயிர்க்கசிவில் கிடைத்திருப்பதால் மனிதநேயத்தின்  தத்துவங்களும் தந்தம் போலவே  வளைந்து விட்டன.

சித்தமும் சிஸ்டமும் மக்களுக்குத்தானே தவிர தலைவர்களுக்கு கிடையாது எனவும் வளைந்து நீண்ட தந்தங்கள் சொல்வது போல உள்ளன.

மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா மலேசிய புலிகள் காப்பகத்தின் புரவலராக இருப்பதால் யானை தந்தம்தானே என வாளாவிருந்து விட்டாரா எனவும் கேள்விகள் குவிகின்றன.

2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

தந்தங்களை உரிமைப்படுத்துவது என்பது சட்டவிரோத செயல். இச்சட்டத்தின் 716ஆவது விதியின் செக்சன் 68(1)(பி) இப்படித்தான் சொல்கிறது.

மகாதீர் போன்றவர்கள் தந்தங்களை உரிமைப்படுத்தி வைத்திருந்தால் அது சட்டவிரோதச் செயலாகக் கருதப்படாது. மாறாக அவை பெரிய மனிதர்களின் தனிநலன் கலந்த அவா என்றாகும் என்றெல்லாம் அச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

யானைத் தந்தங்களை உரிமைப்படுத்தி வைத்திருந்தால் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும். அதனை செலுத்தத் தவறினால் முன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அல்லது இரண்டும் ஒருசேர விதிக்கப்படும் எனவும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் கூறுகிறது.

இதன் அடிப்படையில் பார்ப்போமானால் வனவிலங்கின் உடல் பாகங்களை வைத்திருப்பது குற்றச் செயலாகவே சட்டரீதியாக பார்க்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

‘மகாதீர் உடைத்தால் மண் சட்டி-மக்கள் உடைத்தால் பொன் சட்டி’ என புதிய சித்தாந்தம் உருவாகி விடும் அபாயத்தில் மலேசியா சிக்கி விடக்கூடும் என்பதால்…

மகாதீர் மீது  விசாரணை பாயவேண்டும் என்பதே சரியானது என்ற எண்ணம்  பெரும்பாலான மலேசியர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here