இளைஞர்கள் வருமானத்தை ஈட்ட தெக்கூன் மோபில் பிரினர் திட்டம்

கோலாலம்பூர் –

கொரோனா நெருக்கடியின் விளைவாக வேலை இழந்தவர்களுக்கு தெக்கூன் நேஷனல் மூலம் தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு வேலை வாய்ப்பு வழங்குகிறது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

உணவுகளையும் பொருட்களையும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு வேலை செய்யும் வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தெக்கூன் மோபில் பிரினர் 1.0 எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருட்களை அனுப்பும் வேலை செய்வோருக்கு வட்டியில்லாமல் அதிகபட்சமாக 2 ஆயிரம் வெள்ளி வழங்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் வைத்திருப்போரும் மோட்டார் சைக்கிளைச் சீரமைக்க விரும்புவோரும் இத்திட்டத்தில் பங்கேற்று உதவிகளைப் பெறலாம் என்று அவர் சொன்னார்.

வர்த்தகத் துறையில் ஈடுபட விரும்பும் இன்னும் அதிகமான தொழில் முனைவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவ முடியும். மோட்டார் சைக்கிள் வாங்க மூலதனம் இல்லாதவர்களுக்கும் இத்திட்டம் உதவுகிறது என்றார் அவர்.

தெக்கூன் நேஷனல், தெக்கூன் மோபில் பிரினர் 2.0 திட்டத்தையும் தொடங்கியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 10 ஆயிரம் வெள்ளி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நேற்று இத்திட்டத்தைத் தலைநகரில் தொடக்கிவைத்து அவர் பேசினார். இ-ஹெலிங் நிறுவனங்களுடன் பதிவு செய்துகொண்டுள்ள மோட்டார் சைக்கிள் மூலம் பொருட்களைப் பட்டுவாடா செய்வோர், புதிய மோட்டார் சைக்கிள் வாங்கவும் சுழல் மூலதனத்தைப் பெறவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தெக்கூன் நேஷனல் கொண்டுவந்துள்ள இவ்விரு திட்டங்களும் குறிப்பாக பூமிபுத்ராக்களுக்கும் இந்தியர்களுக்கும் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

நிபந்தனைகளை நிறைவுசெய்வோர் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவிபெற மனு செய்யலாம். ஆயிரம் பேருக்கு உதவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
215 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 2 ஆயிரம் வெள்ளி கடன் உதவியும் வழங்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமன்றி தெக்கூன் வர்த்தக மீட்சித்திட்டமும் ஜூலை 13 தொடங்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வெள்ளி வரை மைக்ரோ கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வட்டி விதிக்கப்படும். மைக்ரோ வணிக நிறுவனங்கள் மீட்சிபெறுவதற்கு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடன் பெறுவோர் 6 மாதங்கள் வரை கடனைச் செலுத்தத் தேவையில்லை. இந்தத் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சொன்னார்.

தெக்கூன் நேஷனல் மூலம் கடன் உதவி பெற விரும்புவோர் www.tekun.gov.my எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here