பேசிப் பேசியே ராஜநாகத்தைக் கொன்ற ஆசாமி

ஆசை தீர மதுவை அருந்தி விட்டு கிராமத்திற்கு காட்டுப் பாதை வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த ஆசாமி வழியில் தென்பட்ட ராஜநாகத்தை அதன் போக்கில் போக விடாமல் தடுத்து அதனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

 குடிகாரர் பேசும் பேச்சை சகித்துக் கொள்ள முடியவில்லையோ என்னவோ ராஜநாகம் அவரை பல முறை தீண்டியது.

 அவர் அப்படி என்னதான் பேசியிருப்பார்? ராஜஸ்தான் மாநிலம் தவ்சா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேர்ந்திருப்பதால் அவர் ராஜஸ்தானி மொழிதான் பேசியிருக்க வேண்டும்.

 நாகம் எத்தனையோ முறை அங்கிருந்து தனது பாதையில் செல்வதற்கு முயன்றது. அதனை தடுத்த குடிகாரர் தொடர்ந்து அதனை பேச்சின் மூலம் நச்சரித்து வந்திருக்கிறார்.

 ஒரு கட்டத்தில் நாகத்தை வலுக்கட்டாயமாக எடுத்து தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்ள நாகம் ‘பச்சக்’, ‘பச்சக்’ என்று முத்தம் கொடுக்கும் பாணியில் அவரைத் தீண்டியது.

 பல முறை தீண்டப்பட்டும் இந்த ஆசாமி அசைந்தே  கொடுக்கவில்லை.

 ஒரு யானையே கடி வாங்கினால் அடுத்த மூன்று மணி நேரங்களில் உயிர் போய் விடும் என்ற நிலையில் இந்த ஆசாமி மூன்றுக்கும் மேற்பட்ட முறையில் தீண்டப்பட்டும் தொடர்ந்து நாகத்திடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

 அவர் வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாகத்திடம் சொல்லி வம்பு இழுத்துக் கொண்டே வந்தார். தாங்க முடியாத நாகம் இறுதியில் துவண்டு விழுந்தது.

 கொஞ்ச நேரத்தில் இறந்தும் போனது.

 அதன் பிறகு அங்கு வந்த போலீஸ்காரர்கள் ஆசாமியை அள்ளிக் கொண்டு போய் மருத்துவமனையில் போட்டார்கள்.

 போதை தெளிந்ததும் எதுவுமே நடக்காதது போல ஆசாமி வீடு திரும்பினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here