கொரோனாவால் இறப்பவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவகாசம்- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த டாக்டர் சைமனின் உடலை சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், டாக்டரின் உடல் வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய அரசு உரிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதவிர தமிழக டி.ஜி.பி.யும் தகுந்த உத்தரவுகளை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பிறப்பித்துள்ளார்’ என்றார்.

அப்போது இறந்த டாக்டர் சைமனின் மனைவி சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘சைமனின் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய காலஅவகாசம் தரவில்லை. அடக்கம் செய்ய அவசரம் காட்டினர். மாலையில் இறந்தவரின் உடலை நடுஇரவில் அடக்கம் செய்ய கல்லறைக்கு கொண்டு சென்றனர். மத ரீதியிலான இறுதி சடங்குகளைக்கூட முறையாக செய்ய அனுமதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இறுதி அஞ்சலி செலுத்த போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளதோ, அந்த உத்தரவுகளை கண்டிப்பாக தமிழக அரசு பின்பற்ற வேண்டும். இறுதி சடங்கு சம்பவங்களின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here