சூரிய சக்தி மின்திட்ட ஊழல் வழக்கு: புதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய ரோஸ்மா மன்சூர் மனு!

கோலாலம்பூர்:

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூர், 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பள்ளிகளுக்கான சூரிய சக்தி மின்திட்ட ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதி கோரி புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இம் மனுவில், தங்களது மேல்முறையீட்டு விசாரணையின் போது 3 புதிய முக்கிய ஆவணங்களை மேலதிக ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியான ராயன் ராட்ஸ்வில் அப்துல்லா, விசாரணை நீதிமன்றத்தில் ரோஸ்மாவிற்கு எதிராகக் கட்டாயப்படுத்திச் சாட்சியம் அளிக்க வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஆதார ஆவணங்களாக, Messrs Shamsuddin & Co சட்ட நிறுவனத்தின் ஜூலை 10-ஆம் தேதியிட்ட கடிதம், ஜூலை 10-இல் ராயன் ராட்ஸ்வில் அப்துல்லா அளித்த காவல் துறை புகார், அவரது அதிகாரப்பூர்வச் சட்டப்பூர்வ உறுதிமொழிப் பத்திரம் ஆகியன எ=கூறப்படுகிறது.

மேலும் ராயன் ராட்ஸ்வில் அப்துல்லாவை மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது கூடுதல் வாய்மொழிச் சாட்சியத்தை மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ரோஸ்மா தரப்பில் கோரப்பட்டுள்ளது.

புதிய ஆதாரங்களைச் சேர்ப்பதற்கான இந்த மனு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பிரதான மேல்முறையீட்டு விசாரணையைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் ரோஸ்மா மன்சூர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here