ராஜஸ்தான் போலி என்கவுண்ட்டர் : 35 ஆண்டுகளுக்குப்பின் வழங்கப்பட்ட தீர்ப்பு

ராஜஸ்தானின் பரத்பூர் அரச குடும்ப வாரிசான ராஜா மான்சிங் என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு தீக் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரஜேந்திர சிங் என்பவரை ஆதரித்து அப்போதைய முதல்-மந்திரி சிவ்சரண் மாத்தூர் பிப்ரவரி 20-ந்தேதி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை மான்சிங் சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இந்த சூழலில் மறுநாள் மான்சிங்கும், அவரது ஆதரவாளர்கள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இது போலி என்கவுண்ட்டர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய போலீஸ் துணை சூப்பிரண்டு கான்சிங் பாதி உள்பட 18 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் ராஜா மான்சிங்கின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், இந்த வழக்கு ராஜஸ்தானில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுரா கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1989-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மதுராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் 35 ஆண்டுகளாக நடந்த விசாரணை கடந்த 9-ந்தேதி முடிவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் துணை சூப்பிரண்டு கான்சிங் பாதி, எஸ்.ஐ. விரேந்திர சிங் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என நீதிபதி சாத்னா ராணி தாகூர் தீர்ப்பு வழங்கினார்.

அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் துணை சூப்பிரண்டு உள்பட முன்னாள் போலீசார் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக 4 போலீசாருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணையின் போதே விடுவிக்கப்பட்டனர். 3 போலீசார் விசாரணை காலத்திலேயே மரணமடைந்தனர்.

உத்தரபிரதேசத்தை உலுக்கிய இந்த வழக்கு 35 ஆண்டுகளில் 1700-க்கும் அதிகமான நாட்கள் விசாரணை நடந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் 25 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். அரசு தரப்பில் 61 சாட்சிகளும், குற்றவாளிகள் தரப்பில் 17 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு உள்ளனர். மேலும் குற்றவாளிகள் அனைவரும் தற்போது பணி ஓய்வு பெற்று உள்ளனர்.

எனினும் 35 ஆண்டுகளுக்குப்பின் தற்போது நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பு தாமதமாக கிடைத்திருந்தாலும், சரியான தீர்ப்பு கிடைத்திருப்பதாக மான்சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here