வாகனங்களை பதிவு செய்ய தடை -உச்ச நீதிமன்றம் அதிரடி

பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தற்போது கொரோனா காலத்தில் வாகன விற்பனை சரிந்த நிலையில், பிஎஸ் 4 வாகன விற்பனை தொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா காலத்தில் வாகன விற்பனை குறைந்துவிட்டதாகவும், அதனால் உச்ச நீதிமன்ற உத்தவை கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிஎஸ் 4 ரக வாகனங்கள் விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கடைப்பிடிக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மார்ச், 29 முதல் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகன விற்பனை அதிகரித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உத்தரவை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here