நோயாளிகளின் பதிவேடு பராமரிக்க திட்டம்

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கு குணம் அடைவோர் விகிதம் அதிகமாகவும், பலியாகிறவர்களின் விகிதம் குறைவாகவும் இருக்கிறது.

இதற்கு மத்தியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர்., சுகாதார அமைச்சகத்துடனும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியுடனும் இணைந்து கொரோனா நோயாளிகளுக்கு தேசிய மருத்துவ பதிவேட்டை உருவாக்கி பராமரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பதிவேடானது, ஆராய்ச்சியாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் கொரோனா சிகிச்சையின் செயல்திறனை புரிந்துகொள்ளவும், நிகழும் பாதகமான விளைவுகள் மற்றும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்துவதற்கான ஆதாரங்களை உருவாக்கவும் பயன்படும் என்று கருதப்படுகிறது.

இது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளின் மருத்துவ, ஆய்வக அம்சங்கள், அதன் புள்ளி விவரங்கள், நாள்பட்ட நோய் பற்றிய தகவல்கள், சிகிச்சை முடிவுகள், எல்லா வயதினருக்குமான சிக்கல்கள் போன்ற தரவுகளை சேகரிப்பதுதான் தேசிய மருத்துவ பதிவேட்டின் நோக்கம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

இது பற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில், “கொரோனா வைரசும், அதனால் ஏற்படுகிற நோயும் அறியப்படாத பல அளவுருக்களை கொண்டுள்ளன. அவை நோயை பற்றிய சரியான புரிதலுக்கும், நிர்வாகத்துக்கும் ஒரு தடையாக அமைந்துள்ளன” என்று கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய முறையாக சேகரிக்கப்படுகிற விரிவான தரவுத்தளமானது, ஆராய்ச்சியாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொருத்தமான விளக்கத்தை உருவாக்கவும், தெரிவிக்கவும் உதவும். கொரோனா வைரஸ் தொற்றின் முக்கியமான புரிதல், தொற்றுநோயின் முன்னேற்றத்தின் போக்குகளை கண்டறிவதற்கும், அதற்கேற்ப தொற்று நோய்க்கான பதிலளிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் உதவும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தேசிய அளவில் புகழ்பெற்ற சண்டிகார் முதுநிலை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, ஜோத்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, பெங்களூரு தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், புனே ஆயுதப்படைகள் ஆஸ்பத்திரி உள்ளிட்ட 15 நிறுவனங்களை பதிவு தளமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது 100 கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here