கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது.

உலகளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது.

பிரேசிலை தொடர்ந்து இந்தியா இதில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, தொற்றுக்கு 25.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 53.13 லட்சம் பேர் தொற்றின் பிடியில் சிக்கிய நிலையில், 17.96 லட்சம் பேர் கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பி இருக்கிறார்கள். அந்த வகையில் உலக அளவில் அமெரிக்கா 3-ம் இடத்தில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 57 ஆயிரத்து 381 பேர் கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பினர். இதனால் இந்தியாவில் கொரோனாவின் மீட்பு விகிதம் என்பது 71.61 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவில் இருந்து குணம் அடைவதில் தேசிய சராசரியை விஞ்சிக்காட்டி தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன. இந்த மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கிறார்கள்.

முதல் இடம் வகிக்கிற டெல்லியில் மீட்பு விகிதம் 89.87 சதவீதம், இரண்டாம் இடத்தில் இருக்கிற தமிழகத்தில் மீட்பு விகிதம் 81.62 சதவீதம் ஆகும். குஜராத் 77.53 சதவீதத்துடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில், மத்திய பிரதேசத்தில் மீட்பு சதவீதம் 74.70, மேற்கு வங்காளத்தில் 73.25, ராஜஸ்தானில் 72.84, தெலுங்கானாவில் 72.72, ஒடிசாவில் 71.98 ஆக உள்ளது.

இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை காட்டிலும் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11.40 லட்சம் அதிகமாக உள்ளது. இது மத்திய, மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவு ஆகும், இதுதான் தினசரி மீட்டெடுப்புகளில் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு வழிவகுத்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை என்பது 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 தான். இது மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு (26.45 சதவீதம்) ஆகும். இவர்கள் தீவிர மருத்துவ சிகிச்சையின் கீழ் உள்ளனர்.

இந்தியாவில் இறப்புவிகிதம் 1.94 சதவீதமாக குறைந்து இருப்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here