இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!

பின்னணி பாடகியும் இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரிணியின் எதிர்பாரா மரணம், இசை ரசிகர்களை உலுக்கி உள்ளது.

பவதாரிணி மறைவால் வாடும் ரசிகர்களுக்கு அவரது குரலிலான பாடல்கள் ஆறுதலாகி வருவதன் மத்தியில், தனிப்பாடல்களுக்கு என பவதாரிணி இசையமைத்தவையும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மகிழ்வான தருணமொன்றில், சகோதரர்களுடன் பவதாரிணி
இசைஞானியின் இதர இசை வாரிசுகள் போலவே பவதாரிணியின் ரத்தத்திலும் இசை ஊறிக்கிடந்ததில், அவரது இசையார்வம் பின்னணி பாடல்கள் பாடுவதற்கு அப்பாலும் நீண்டிருக்கிறது. மிகச்சில பாடல்களே அவர் பாடியிருந்தபோதும் அவை இன்றைக்கும் ரசிகர்களின் இதயத்தை வருடவும், காதுகளில் ரீங்கரிக்கவும் செய்து வருகின்றன. பின்னணி பாடல்களுக்கு அப்பால் ஒரு சில திரைப்படங்களுக்கும் பவதாரிணி இசையமைத் திருக்கிறார்.

இவற்றுக்கு அப்பால் பவதாரிணி இசையமைத்து வெளியிட்ட தனிப்பாடல்கள் இணையத்தில் வெகுவாய் வரவேற்பை பெற்றவை. பாப் ஷாலினி குரலில் ’பறவையே உன்போல் பறக்கிறேன்; மனதையே சிறகாய் திறக்கிறேன்…’ என்ற மயிலிறகாய் வருடும் பாடலை பத்தாண்டுகளுக்கு முன்னர் இசையமைத்து வெளியிட்டு இருக்கிறார் பவதாரிணி.

இதே போன்று பிக் பாஸ் புகழ் ஆஜித் குரலில் வெளியான ‘என் ஸ்வீட்டி நீ… என் க்யூட்டி நீ…’ என்ற பாடலில் இசைஞானியின் துள்ளலிசையில் இன்னொரு பிரதியாய் ரசிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வரிசையில் பாப் ஷாலினியுடன் மீண்டும் இணைந்து ’பொங்கலோ பொங்கல் இது..’ பாடலை இளையராஜாவே வெளியுலகுக்கு பெருமையுடன் அறிமுகம் செய்திருக்கிறார். தான் இசையமைத்த தனிப்படல்களில் எல்லாம் ’ராஜா பவதாரிணி’ என தந்தையின் பெயரை முன்னொட்டாய் சேர்த்தே பவதாரிணி பரவசம் கொண்டிருக்கிறார். மேற்படி பொங்கல் பாடல் வெளியாகி 11 ஆண்டுகள் இடைவெளியில், இந்த வருடத்தின் பொங்கலுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்ததில் தவித்து வந்த பவதாரிணி, ஜன.25 மாலை இலங்கையில் காலமாகி இருக்கிறார்.

பவதாரிணியின் அகால மரணம் இசை ரசிகர்களை வெகுவாய் பாதித்துள்ளது. பவதாரிணியின் உடல்நல பாதிப்பு, சிகிச்சை விவரம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் முழுமையாக வெளியாக நிலையில், பவதாரிணியின் குரல்களை ஒலிக்க விட்டு தங்களது அஞ்சலிகளை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த மண்ணை விட்டு பிரிந்தபோதும் ‘பறவையே உன்போல பறக்கிறேன்…’ என தனது இசையிலும் என்றும் ஜீவித்திருப்பார் பவதாரிணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here