பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் கூட கடந்த மே மாதம் 23-ந்தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இரு தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் இந்த தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 1952-ம் ஆண்டுக்குப்பிறகான பாராளுமன்ற வரலாற்றில் ஏராளமான முதல்முறை நிகழ்வுகளை வருகிற கூட்டத்தொடர் காண உள்ளது.

இதில் முக்கியமாக மாநிலங்களவை அறையில் 51 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் 60 உறுப்பினர்களும், மீதமுள்ள 132 பேர் மக்களவை அறையிலும் அமர்த்தப்படுவார்கள். இதேப்போலவே மக்களவை உறுப்பினர்களுக்கும் இருக்கை வசதி செய்யப்படுகின்றன.

பார்வையாளர் மாடத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு வசதியாக இரு அறைகளிலும் 4 மிகப்பெரிய திரைகளும், 4 மாடங்களிலும் 6 சிறிய திரைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இரு அவைகளுக்கு இடையே பிரத்யேக கேபிள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏ.சி. வசதி கொண்ட அறைகளில் வைரஸ், பாக்டீரியா அச்சுறுத்தலை எதிர்கொள்ள புற ஊதா கிருமிநாசினி கதிர்வீச்சு பயன்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

வழக்கமாக பாராளுமன்ற இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், ஒரு அவை காலையிலும், மற்றொரு அவை மாலையிலும் இயங்கும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர அதிகாரிகள் மற்றும் ஊடகப்பிரிவினருக்கான மாடங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் வெறும் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கையாளும் பேப்பர் உள்ளிட்ட பொருட்களின் தேவையை குறைக்குமாறு அதிகாரிகளை வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here