ரெயில்கள் நிற்கும் நிலையங்கள்- நிறுவனங்களே முடிவு

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்குவதற்கு அனுமதிப்பது என ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்.

இத்திட்டம், ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகுக்கும். தனியார் ரெயில்களை இயக்குவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் 23 நிறுவனங்கள் ஆர்வமாக பங்கேற்றன. தனியார் ரெயில் பெட்டிகள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். ரெயில்வேயின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்துவதற்காக, தனியார் ரெயில் நிறுவனங்களிடம் ரெயில்வே கட்டணம் வசூலிக்கும்.

மொத்த வருவாயிலும் தனது பங்கை பெறும். டிக்கெட் முன்பதிவு வசதியை அளிப்பதற்கும் கட்டணம் பெற்றுக்கொள்ளும். 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரெயில்கள் ஓடத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தனியார் ரெயில்களுக்கான விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையில் ரெயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

குறிப்பிட்ட வழித்தடங்களில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் தனியார் ரெயில்கள் நின்று செல்லலாம் என்பதை அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், அதை முன்கூட்டியே ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் ரெயில் இயக்கும் திட்டத்தில் இது ஒரு அங்கமாக இடம்பெற வேண்டும்.

ஆனால், ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதே வழித்தடத்தில் நிறுத்தும் நிலையங்களின் எண்ணிக்கையை விட அது அதிகமாக இருக்கக்கூடாது.

நிறுத்தப்படும் நிலையத்தில் எந்த நேரத்தில் ரெயில் வந்து சேரும், எந்த நேரத்தில் புறப்படும் என்பதையும் அத்திட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிறுத்தங்கள், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அமலில் இருக்க வேண்டும். அதன்பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

எந்த ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவது, எந்த ரெயில் நிலையத்தில் சுத்தப்படுத்துவது என்ற தகவல்களும் திட்டத்தில் இடம்பெற வேண்டும். சந்தை சூழ்நிலையை பொறுத்து, தனியார் நிறுவனங்களே கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here